ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க முடியாது என்றும், அங்கீகாரம் அளித்தால் சமூகத்தில் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கிவிடும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரே பாலின திருமணத்தை நாட்டின் சட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்படுவதை அடிப்படை உரிமையாக மனுதாரர்கள் கோர முடியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஓரினச் சேர்க்கையாளர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வதும், உடலுறவு கொள்வதும் குற்றமில்லை என்றாலும், இந்திய குடும்பம் என்ற கருத்துடன் ஒப்பிட முடியாது என்று மத்திய அரசு வாதிட்டது. தற்போதைய சட்ட கட்டமைப்பிற்கு எதிராக எல்ஜிபிடிக்யூ+ தம்பதிகள் தாக்கல் செய்துள்ள மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியது.
இதையடுத்து இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கலாமா? என்பது தொடர்பான இறுதிக்கட்ட வாதங்கள் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் எனவும் கூறினர். மேலும், இது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்றும், இந்த விஷயத்தில் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நீதிபதிகள் கூறினர். இந்த விசாரணை உச்ச நீதிமன்ற இணையதளம் மற்றும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.