No results found

    நெல்லை-தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் இன்று இயக்கம்- பயணிகள் மகிழ்ச்சி


    தென்மாவட்டங்களான குமரி, நெல்லை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பயணிகள் மற்றும் விரைவு ரெயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். இந்த வழித்தடத்தில் சாதாராண நாட்களை தவிர தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கியமான பண்டிகை காலங்களில் 2 முதல் 3 மாதங்களுக்கு முன்பே சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு அடுத்த நிமிடங்களிலேயே முன்பதிவு செய்யப்பட்டுவிடும். இந்நிலையில் வார இறுதி நாட்களில் பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயிலை இயக்க பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன்படி இன்று மாலை நெல்லையில் இருந்து தஞ்சாவூர் வழியாக சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படாது எனவும், இது ஒருவழி ரெயில் எனவும் தென்னக ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை-தாம்பரம் இடையே இயக்கப்பட உள்ள இந்த சிறப்பு ரெயில் (06040) இன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8.35 மணிக்கு மதுரை சென்றடைகிறது. பின்பு மதுரையில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு நாளை (திங்கட்கிழமை) காலை 6.15 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.

    இந்த ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டியுடன் கூடிய மாற்று திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் 4 முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பயணிகள், வியாபாரிகள் பெருமளவில் பயன் அடைவார்கள் என்பதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Previous Next

    نموذج الاتصال