No results found

    மகப்பேறு கால பராமரிப்பு


    நமது பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் கருக்கொண்ட காலத்தில் மகளிருக்கு ஏற்படும் பல்வேறு உபாதைகளுக்கு மருத்துவம் கூறப்பட்டுள்ளது. பெண்களின் மகப்பேறு காலத்தில் தாய் சேய் இருவரின் நலனும் முக்கியமானது. இக்காலத்தில் பெண்கள் தங்கள் உடலளவிலும், மனதளவிலும் பல மாறுதல்களை அடைகின்றனர். கருக்கொண்ட முதல் சில மாதங்களில் ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்டிரோன், ஹெச்.சி.ஜி போன்ற ஹார்மோன்களின் செயல்பாட்டினால் மார்பகங்களில் வலி, குமட்டல், வாந்தி, சோர்வு போன்றவை ஏற்படுகின்றன. மேலும் உடல் எடையானது 10 முதல் 12 கிலோ வரை கூடுகிறது, இரும்புச்சத்து, கால்சியம் போன்றவை அதிகமாகத் தேவைப்படுகின்றன. வளர்ச்சிதை மாற்றம் 10-25% அதிகரிக்கிறது.

    மேலும் கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து முப்பது வாரங்கள் வரை மாதத்திற்கு ஒரு முறையும், முப்பத்தாறு வாரங்கள் வரையில் 15 நாட்களுக்கு ஒரு முறையும், பிறகு மகப்பேறு ஆகும் வரை வாரம் ஒரு முறையும் மருத்துவ ஆலோசனைக்குச் செல்வது சிறந்தது. அவர்களின் குருதி அழுத்தம், ரத்தப் பரிசோதனை மேலும் சிறுநீரில் புரதம், சர்க்கரைப் படிவுகள் காணப்படுகிறதா போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஏற்படும் குமட்டல், வாந்தி போன்றவற்றிற்கு மாதுளை மணப்பாகு சிறந்த மருந்தாகும். மேலும் மாதுளைப் பழச்சாறுடன் கற்கண்டு சேர்த்து வீட்டிலேயே தயாரித்து அருந்தலாம். இது ரத்தச்சோகை ஏற்படாமலும் பாதுகாக்கிறது. மேலும் கறிவேப்பிலையை துவையலாகவோ அல்லது பொடியாகவோ தயாரித்து உண்ணலாம். சீரகத்தைப் பொடி செய்து தண்ணீருடன் கலந்தோ அல்லது தண்ணீரில் ஊற வைத்தோ அருந்தலாம். இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி, குமட்டலை தடுப்பதுடன், அஜீரணம், நீர்ச்சுருக்கு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.

    மேலும் அதிகமான வாந்தியினால் ஏற்படும் உடல் நீரிழப்பைத் தவிர்ப்பதற்கு மோர், நெல்லிக்காய்ச் சாறு, எலுமிச்சை சாறு இவற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்தலாம். இதனால் உடல் அதிகமாக குளிர்ச்சியாவது தடுக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்த சோகையைத் தவிர்ப்பதற்கு அன்னபேதி செந்தூரம், நெல்லிக்காய் லேகியம், மாதுளை மணப்பாகு, கரிசாலை லேகியம், திராட்சாதி ரசாயனம் போன்ற பல சித்த மருந்துகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்த சோகையை தவிர்க்கின்றன. இவை தவிர உணவில் முருங்கை கீரை, கறிவேப்பிலை, உலர்ந்த திராட்சை, பேரிச்சை, பீட்ரூட், ஈரல் போன்ற பல உணவு வகைகள் இரும்புச்சத்து நிறைந்தவை. இதனுடன் வைட்டமின்-சி நிறைந்த நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, முட்டைகோஸ், காலிபிளவர் போன்றவற்றை சேர்த்துக் கொள்வதன் மூலம் இரும்புச்சத்து எளிதாக குடலில் உறிஞ்சப்படுகிறது.

    கர்ப்ப காலத்தில் அதிகப்படியாக காணப்படும் அடுத்த பாதிப்பு அஜீரணம் ஆகும். இதற்கு ஏலாதி சூரணம், தாளிசாதி வடகம், இஞ்சி வடகம், பஞ்ச தீபாக்கினி சூரணம் போன்ற பல சித்த மருந்துகள் உள்ளன. இவை தவிர சீரகத்தை வறுத்து தேனுடன் கலந்து உண்ணலாம். புதினா மற்றும் கொத்துமல்லி இலையை அரைத்துத் துவையலாக உண்ணலாம். தனியாவை கஷாயமாக செய்து அருந்தலாம். இதை போல ஓமத்தினையும் கஷாயமாக அருந்தலாம். மேலும் கர்ப்ப காலத்தில் அதிகமாக எண்ணையில் பொறித்த மசாலா சேர்த்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சிறிது நேரத்திற்கு ஒருமுறை குறைந்த அளவு உணவினை எடுத்துக்கொள்வது, பழச்சாறுகளை அருந்துவது, டீ, காபி போன்ற பானங்களுக்கு பதிலாக சுக்கு காபி, மோர் அருந்துதல் நல்லது. மேலும் கர்ப்ப காலத்தில் அதிகப்படியான கோபம், மனதிற்கு கவலை தரும் செயல்களைத் தவிர்த்தல் போன்றவை அஜீரணம் ஏற்படாமல் பாதுக்காக்கும் வழிமுறைகள் ஆகும்.

    சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஈறுகளில் வீக்கம் மற்றும் ரத்தக்கசிவு காணப்படும். இதற்கு சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள திரிபலா சூரணத்தைக் கொண்டு பல் துலக்கலாம். மேலும் வைட்டமின்-சி நிறைந்த நெல்லிக்காய் லேகியம், துரிஞ்சி மணப்பாகு போன்றவற்றை அருந்தலாம். மேலும் சில பெண்கள் கர்ப்ப காலத்தில் மல சிக்கலினால் பாதிக்கப்படுவர். இவர்கள் தங்களது உணவில் நார்ச்சத்து நிறைந்த கீரை வகைகள், திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் திரிபலா சூரணத்தினை தினமும் இரவு சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி உண்ணலாம். இது மலச்சிக்கலில் இருந்து விடுதலை தரும் எளிய மருத்துவ முறையாகும். சில மகளிர்க்கு கர்ப்ப காலத்தில் கரு வளர்ச்சி அடைய தொடங்கும் பொழுது வயிற்று பகுதியில் அரிப்பு ஏற்படுகிறது. இதற்கு அருகன் தைலம் என்ற சித்த மருந்தினை மருத்துவரின் ஆலோசனைப்படி வெளிப்புறமாக தடவலாம். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு உடல் உஷ்ணம் அதிகரித்து காணப்படும். இதற்கு வாரம் இரு முறை அரக்கு தைலம், சுக்கு தைலம் போன்ற எண்ணைகளால் எண்ணை குளியல் செய்யலாம். சைனஸ், சுவாச கோளாறு உள்ளவர்கள் சித்த மருத்துவரை கலந்து ஆலோசித்து இதனை பின்பற்றலாம். மேலும் பாவன பஞ்சாங்குல தைலம் போன்ற மருந்துகள் உடல் வெப்பத்தை சீராக்கி, மலச்சிக்கலை நீக்கி, கருவில் குழந்தையின் வளர்ச்சியை பாதுகாத்து, சுகப்பிரசவம் ஏற்பட உதவி புரிகிறது. ஏழாவது மாதம் தொடங்கி உளுந்து தைலத்தை இடுப்பு மற்றும் கால்களில் தேய்த்து குளித்து வர இடுப்பு மற்றும் கால் வலியை நீக்குவதோடு, சுகப்பிரசவத்திற்கு உதவியாக உள்ளது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால்சியம் குறைப்பாட்டை தவிர்க்க உணவில் கால்சியம் நிறைந்த பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், பாதாம், முட்டை வெண்கரு, வெண்டைக்காய், ஆரஞ்சு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் எவ்வாறு மகளிரின் உடல் மாறுதல் அடைகிறதோ அதைப்போலவே மகப்பேற்றிற்கு பிறகும் மகளிரின் உடலில் பல மாறுதல்கள் அடைகின்றது. தொடர்ந்து சில நாட்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கினால் பெரும்பாலும் சோர்வாக காணப்படுவர். சிலருக்கு தூக்கமின்மையும் காணப்படும். இதற்கு அமுக்கரா சூரணம் என்ற சித்த மருந்தினை பாலில் கலந்து தரலாம். இது உடல் சோர்வினை நீக்குவதோடு, தூக்கமின்மையை சரி செய்கிறது. குழந்தை பெற்ற பின்னர் ஏற்படும் உடல் வலி, களைப்பு, சோர்வு, அஜீரண கோளாறுகள் போன்றவற்றை நீக்க சவுபாக்கியசுண்டி லேகியம் என்ற சித்த மருந்து பயன்படுகிறது. மேலும் இம்மருந்து தாய்க்கு பால் சுரப்பையும் தூண்டுகிறது. இதனுடன் சேர்ந்து சதாவேரி லேகியம் போன்ற மருந்துகளும் பால் சுரப்பைத் தூண்டுகின்றன. பிரசவத்திற்கு பின்னர் பெரும்பாலான பெண்களுக்கு மூலம் பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கு நிலவாகைச் சூரணம், கருணைக்கிழங்கு லேகியம் போன்ற சித்த மருந்துகள் பயன்படுகின்றன. நாம் முன்னரே கூறியது போல இரும்புச்சத்து, கால்சியம் சத்து நிறைந்த உணவினை உண்ணுதல், அஜீரணம் ஏற்படாமல் பாதுகாத்தல் போன்றவற்றை மகப்பேற்றிற்கு பின்னரும் கடைப்பிடித்தல் சிறந்தது. மேலும் சுகப்பிரசவத்திற்கு பின்னர் கரு உறுப்பில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு வெதுவெதுப்பான நீரில் திரிபலா சூரணம் மற்றும் மஞ்சள் நீர் கலந்து கழுவி வரலாம். மேலும் வெள்ளைப்பூண்டுடன், நல்லெண்ணெய், கருப்பட்டி சேர்த்து லேகியமாக செய்து உண்ணலாம். இது பால் சுரப்பினை தூண்டுவதுடன் மகப்பேற்றினை தொடர்ந்து கருப்பையில் உதிரம் சேராமல் சீராக வெளிப்படுத்துகிறது. பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினாலும், மனச்சோர்வினாலும் பெண்களுக்கு முடி உதிர்வது அதிகரித்து காணப்படும். இதற்கு பஞ்சகற்ப குளியல் சூரணம், நீலிபிரிங்காதி தைலம் போன்ற சித்த மருந்துகளை பயன்படுத்தலாம். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் குருதி அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களுக்கு சீரகச்சூரணம் போன்ற மருந்துகளை அவர்களின் குறிகுணங்களுக்கு ஏற்ப தனியாகவோ ஆங்கில வழி மருந்துகளுடனோ சேர்த்து கொள்ளலாம். நாம் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வகை மருந்துகளையும் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது சிறந்தது. எனவே நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் கருவின் உற்பத்தி தொடங்கி, கர்ப்ப காலத்திலும், குழந்தை பெற்ற பின்னரும் பயன்படக்கூடிய மருந்து வகைகள் மகளிருக்காக உள்ளன. உணவே மருந்து, மருந்தே உணவு என்பதற்கிணங்க நம் வாழ்வியலோடு ஒன்றாக இணைந்து உள்ள சித்த மருத்துவ மருந்துகளை பயன்படுத்தி தாய் சேய் நலனைப் பாதுகாப்போம்.

    Previous Next

    نموذج الاتصال