நம் ஆன்மிகத் திருத்தலங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு தலவிருட்சம் உண்டு. குறிப்பிட்ட விருட்சத்தையும் குறிப்பிட்ட திருத்தலத்து தெய்வத்தையும் இணைத்து வைத்திருக்கிறார்கள். தெய்வத்தைக் கும்பிடுவதோடு அந்த விருட்சத்தையும் கும்பிடுகிறார்கள் அடியவர்கள். தல விருட்சத்தைச் சுற்றி வந்தால் சுவாமியையே சுற்றி வந்த பலன் உண்டு. உத்தரகோச மங்கை என்னும் திருத்தலத்தில் இலந்தை மரம் தல விருட்சம். விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சம். பொதுவாக சிவன் கோவில்கள் பலவற்றில் வில்வ மரம் தல விருட்சமாக இருக்கும்.
அரிய வகை மரங்கள் தல விருட்சங்களாக அமைந்ததாலேயே காலம் காலமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இல்லாவிட்டால் பல மரங்கள் அழிந்தே போயிருக்கும். பல மாரியம்மன் ஆலயங்களில் வேப்பமரம்தான் தல விருட்சம். வேப்ப மரத்தை எங்கு பார்த்தாலும் நமக்கு மாரியம்மன் நினைவு வருகிறது. தெய்வீக நினைவின் மூலம் மனத்தில் தீய எண்ணங்கள் அகன்று மனம் தூய்மையடைகிறது. மனத்துக்கண் மாசிலன் ஆகும் நிலை நோக்கி மரங்கள் நம்மை நெறிப்படுத்துகின்றன. தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யரின் ஆசிரியரான மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை எண்ணற்ற தல புராணங்களைச் செய்யுள் வடிவில் இயற்றியவர். அதனாலேயே தலபுராண வேந்தர் என அவர் அழைக்கப்பட்டார்.
ஒவ்வொரு தலத்திலும் உறையும் சுவாமியைப் பற்றியும் அம்மனைப் பற்றியும் எழுதுவதோடு கூடவே அந்தந்தத் தலத்தின் தலவிருட்சம் பற்றியும் அவர் புகழ்ந்து எழுதுகிறார். சுவாமிக்கும் அம்மனுக்கும் இணையானது தல விருட்சம். அரச மரத்தடியில் பிள்ளையார் சிலையை வைத்து வழிபடுகிறோம். எல்லா ஊர்களிலும் குளத்தங்கரையில் அரச மரம் உண்டு. அரச மரத்தடியில் பிள்ளையார் சிலையும் உண்டு. ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு மவுன மொழியால் உபதேசம் செய்கிறார் தட்சிணாமூர்த்தி வடிவில் இருக்கும் சிவபெருமான். ஆலமரத்தின் கீழ் சிவன் தெற்கு முகமாக அமர்ந்துள்ளதால் அவர் தென்முகக் கடவுள் என அழைக்கப்படுகிறார்.
பிரளய காலத்தில் ஆல மரத்தின் இலையில் கண்ணன் குழந்தையாகத் தோன்றியதாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. ஆலிலைக் கண்ணன் என்றே அந்தக் கடவுள் அழைக்கப்படுகிறார். பல ஊர்களில் அரசமரமும் வேப்பமரமும் இணைந்து வளர்ந்த இடங்கள் வழிபாட்டிற்குரிய இடங்களாகக் கருதப்படுகின்றன. அரச மரமும் வேப்ப மரமும் இணைந்திருப்பது சிவ சக்தியின் வெளிப்பாடு. அரச மரம் சிவனின் வடிவம். வேப்ப மரம் சக்தியின் வடிவம். சிவ சக்தி இணைந்திருப்பதால் அவர்களின் மகனான பிள்ளையாரை அங்கு பிரதிஷ்டை செய்வதுண்டு. அதிகாலையில் நீராடிவிட்டு பிள்ளையாரையும் மரங்களையும் சுற்றி வருவோர்க்குப் புத்திர பாக்கியம் கிட்டும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே உண்டு. வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து பல்வேறு உயர்ந்த பொருட்கள் வெளிப்பட்டன. அப்படி வெளிப்பட்டவற்றில் ஒன்று கற்பக மரம். கற்பக மரம் தேவலோகத்தில் உள்ள மரம். இதனடியில் நின்று எதைக் கேட்டாலும் அந்த மரம் கேட்டதை கொடுக்கும். கேட்டதைக் கொடுப்பதால் வள்ளல் தன்மைக்கு தேவலோகக் கற்பக மரத்தை உதாரணமாக்கிப் பல புலவர்கள் பாடியுள்ளனர். பெயர் தெரியாத கவிஞர் ஒருவரால் எழுதப்பட்ட நந்திக் கலம்பகம், நந்திவர்ம பல்லவனின் கொடைக் குணத்தைப் பற்றிப் பேசுகிறது. அவன் இறந்தபோது கலங்குகிறார் கவிஞர். அவனின் மதிபோன்ற முகம் நிலவை அடைந்ததாகவும் அவன் புகழ் கடலை அடைந்ததாகவும் அவன் வீரம் கானகத்தில் வாழும் புலியை அடைந்ததாகவும் சொல்லும் கவிஞர் அவனின் கேட்டதெல்லாம் கொடுக்கும் வள்ளல் தன்மையுடைய கரங்கள் கற்பக மரத்தை அடைந்ததாகப் பாடுகிறார். 'வானுறு மதியை அடைந்ததுன் வதனம் மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி கானுறு புலியை அடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்ததுன் கரங்கள் தேனுறு மலராள் அரியினை அடைந்தாள் செந்தழல் புகுந்ததுன் மேனி யானுமென் கவியும் எங்ஙனே புகுவோம் எந்தையே நந்தி நாயகனே!' ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களும் மரங்களைப் பற்றிய பல செய்திகளைத் தருகின்றன. ராமாயணத்தில் ராமன் சுக்கிரீவன் கேட்டுக் கொண்டதன்பேரில் ஒரு அம்பை எய்து ஏழு மகாமரங்களை வீழ்த்துகிறான். அதைக் கண்டு ஏழு என எண்ணப்படும் எல்லாமே அஞ்சி நடுங்கின என்கிறார் கம்பர். ஒருவேளை ஏழு என்ற எண்ணிக்கை உடைய அனைத்தையும் ராமன் கணை தன் இலக்காகக் கொண்டிருந்தால் என்ன செய்வது என்பதே அந்த அச்சத்திற்குக் காரணம். ஏழு கடல்கள், ஏழு உலகங்கள், ஏழு மலைகள் என்றிப்படி எவையெல்லாம் உள்ளனவோ அவைகள் நடுங்கின என்பதை பட்டியலிடுகிறது அந்த அழகிய பாடல். 'ஏழு வேளையும் உலகம் மேல் உயர்ந்தன ஏழும் ஏழு குன்றமும் இருடிகள் எழுவரும் புரவி ஏழும் மங்கையர் எழுவரும் நடுங்கின என்ப ஏழு பெற்றதோ இக்கணைக்கு இலக்கம் என்றெண்ணி' மகாபாரதத்திலும் ஒரு முக்கியமான கட்டத்தில் ஒரு மரம் பற்றிய செய்தி வருகிறது. பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தின் முன்பாக இடுகாட்டில் இருக்கும் ஒரு பெரிய மரத்தின் பொந்தில்தான் தங்கள் அஸ்திரங்களை மறைத்து வைத்தார்கள். ஒரு தோல்பையில் தங்கள் அஸ்திரங்களை வைத்து அந்தத் தோல்பையை அந்த மரப் பொந்திற்குள் யாரும் அறியாதவாறு வைத்திருந்தார்கள். பிருகன்னளையாகப் பெண்ணுருவில் இருந்த அர்ச்சுனன், அஞ்ஞாத வாசம் முடிந்து துரியோதனனுடன் போர் நிகழ்த்த நேரும்போது அந்த மரத்தை நாடிச் சென்று அதில் உள்ள அஸ்திரங்களை எடுத்துக் கொள்ளும் தகவல் மகாபாரதத்தில் உண்டு. கண்ணன் சரிதத்தைக் கூறும் பாகவதத்திலும் மரங்களாகப் பிறந்து பின் சாப விமோசனம் பெற்ற இருவரைப் பற்றிய செய்தி வருகிறது. குபேரனது புதல்வர்களான நளகூபரன், மணிக்கிரீவன் ஆகிய இருவரும் ஒரு சாபத்தின் காரணமாக கோகுலத்தில் இரண்டு மருத மரங்களாகப் பிறந்திருந்தார்கள். வெண்ணெய் திருடிய கண்ணனை உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்ச வைத்தாள் யசோதை. அங்கேயே கட்டுண்டு இரு என அவனை அதட்டி அவனைத் தனியே விட்டுச் சென்றாள் அவள். மாயக் கண்ணன் ஓரிடத்தில் சும்மா இருப்பானா என்ன? கண்ணன் கட்டப்பட்ட உரலையும் இழுத்துக் கொண்டு தவழ்ந்து செல்லத் தொடங்கினான். இரட்டை மருத மரங்களுக்கு இடையே அவன் தவழ்ந்து சென்றபோது உரல் மரங்களின் இடையே சிக்கிக் கொண்டது. கண்ணன் வேகமாக இழுத்தபோது இரண்டு மரங்களும் முறிந்து கீழே விழுந்தன. சாபவிமோசனம் பெற்ற நளகூபரனும் மணிக்கிரீவனும் கண்ணனைக் கைகூப்பித் துதித்துவிட்டுத் தேவலோகம் சென்றார்கள் என்கிறது கண்ணனது திருச்சரிதத்தைப் பேசும் பாகவதம். முருகப் பெருமான் வரலாற்றைச் சொல்லும் கந்த புராணத்தில் சூர சம்காரத்தின்போது ஒரு மரம் வருகிறது. சூரபத்மன் மாமரமாய் உருமாறி நிற்கிறான். அந்த மாமரத்தை முருகனின் வேல் இரண்டாகப் பிளக்கிறது. மரத்தின் ஒருபாதி முருகனின் வாகனமான மயிலாகிறது. இன்னொரு பாதி சேவல் கொடியாகிறது என்கிறது கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணம். வள்ளியைத் திருமணம் புரிந்துகொள்ள வந்த முருகன் கிழவனாக நின்றதையும் மரமாக நின்றதையும் வேடனாக நின்றதையுமெல்லாம் கந்த புராணத்தில் வரும் வள்ளி திருமணக் கதை பேசுகிறது. முருகன் வள்ளியின் பேரழகில் சொக்கித்தான் மரமாக நின்றான் எனத் தன் கற்பனையை ஏற்றிக் கவிதை புனைகிறார் மகாகவி பாரதியார். 'வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா வடி வேலவா - அங்கோர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி ஆனது வேலவா வடி வேலவா சொல்லினைத் தேனில் குழைத்துரைப்பாள் சிறு வள்ளியை குற வள்ளியை கண்டு சொக்கி மரமென நின்றனை தென்மலைக் காட்டிலே மலைக் காட்டிலே கல்லினையொத்த வலிய புயங்கொண்ட பாதகன் கொலை பாதகன் சிங்கன் கண்ணிரண் டாயிரங் காக்கைக் கிரையிட்ட வேலவா வடி வேலவா பல்லினைக் காட்டி வெண் முத்தைப் பழித்திடும் வள்ளியை குற வள்ளியை - ஒரு பார்ப்பனக் கோலம் தரித்துக் கரம்தொட்ட வேலவா வடி வேலவா!' புத்தர் போதி மரத்தடியில் தியானம் செய்துதான் ஞானம் பெற்றார் என்று அவரது சரிதம் சொல்கிறது. ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பதை அவருக்கு அறிவுறுத்தியது அந்த மரத்தடி தான். போதி மரம் என்பது அரச மரம்தான். தன் நிழலில் அமர்ந்து தியானம் செய்பவர்க்கு ஞானத்தைத் தரும் சக்தி பெற்ற மரம் என்பதால் மரங்களின் அரசன் என்ற பொருளில் அது அரச மரம் எனப் போற்றப்படுகிறது. இன்றும் நம்மைச் சுற்றியுள்ள மரங்கள் நம் மனத்தில் உயர்ந்த ஆன்மிகச் சிந்தனைகளை எழுப்பக் காத்திருக்கின்றன. மரங்கள் எழுப்பும் ஆன்மிக உணர்வைப் புரிந்துகொண்டு பயனடைய வேண்டியது ஆன்மிக நாட்டமுள்ளோரின் பொறுப்பு.