ஆனால் ஒருவர் 12 ஆண்டுகள் தொடர்ந்து ஒருநாள் கூட விடாமல் வடிவுடையம்மன் ஆலயத்துக்கு சென்று மணி கணக்கில் நின்று வழிபட்டு வந்துள்ளார் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக உள்ளது. இந்த பெருமைக்கும், சிறப்புக்கும் சொந்தக்காரர் த.ப.ராமசாமி பிள்ளை என்பவர் ஆவார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து குடியேறுபவர்கள் பெரும்பாலும் வட சென்னையில் தான் குடியேறுவார்கள். அந்த வகையில் த.ப.ராமசாமி தஞ்சை மண்டலத்தில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தவர். இவர் சென்னை சூளையில் வசித்து வந்தார்.
சூளையில் உள்ள வீட்டில் இருந்து திருவொற்றியூர் வரை தினமும் நடந்தே செல்வார். அங்கு தியாகராஜ சுவாமியையும், வடிவுடையம்மனையும் ஆத்மார்த்தமாக வழிபட்டு விட்டு மீண்டும் சூளை திரும்புவார். 12 ஆண்டுகள் ஒருநாள்கூட இடைவிடாமல் அவர் இந்த தினசரி வழிபாட்டை மேற்கொண்டார். இந்த காலகட்டத்தில் அவருக்கு சோதனை தருவதுபோல ஒருநாள் அவரது மகன் மரணமடைந்தான். என்றாலும், த.ப. ராமசாமி பிள்ளை தனது பக்தியை கைவிடவில்லை. மகன் உடலை வைத்துவிட்டு திருவொற்றியூர் சென்று தியாகராஜ சுவாமிகளை வணங்கிவிட்டு வந்தபிறகே மற்ற காரியங்களை செய்தார். அந்தளவுக்கு தியாகராஜ சுவாமிகள் மீதும், வடிவுடையம்மன் மீதும் அவர் பக்தி கொண்டிருந்தார்.
அந்த ஆலயத்துக்கு அவர் எத்தனையோ திருப்பணிகளை செய்துள்ளார். பல்வேறு சன்னதிகளை புதுப்பித்துள்ளார். புதிய கட்டிடங்களையும் கொண்டுவந்தார். மொத்தத்தில் தியாகராஜ சுவாமிக்கும், வடிவுடையம்மனுக்கும் ஒரு அடிமை போலவே அவர் நடந்துகொண்டார். இதனால் அவரை திருவொற்றியூரான் அடிமை என்றே மக்கள் அழைத்தனர். இவரது பூர்வீகம் தஞ்சை அருகே உள்ள கரந்தை என்ற ஊர் ஆகும். 1889-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி அவர் அங்கு பிறந்தார். இளம் வயதிலேயே அவருக்குள் பக்தி பெருக்கெடுத்து ஓடியது. விபரம் புரியாத வயதில் தஞ்சை கரந்தை நகரில் உள்ள கருவேலநாதர் ஆலயத்துக்கு சென்று வழிபடுவார்.
அப்போது அங்கு பிராமணர்கள் மந்திரங்கள் ஓதுவதை கேட்டு யோசிப்பார். அந்த மந்திரங்களில் உள்ள உண்மையான பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. பல தடவை அவர் கருவேலநாதர் ஆலயத்தில் பூஜை நடத்தும் பிராமணர்களிடம் இதுபற்றி கேட்டுள்ளார். ஆனால் உனக்கெல்லாம் அதை சொல்லிக் கொடுக்க இயலாது என்று அவர்கள் விரட்டி விட்டனர். இதனால் த.ப.ராமசாமி பிள்ளைக்கு வேத மந்திரங்களையும், அதன் பொருளையும் உண்மையாக, முழுமையாக தெரிந்து கொள்ள இயலவில்லையே என்ற விரக்தியும், ஏக்கமும் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் கல்வி பயின்று சென்னைக்கு குடி வந்தார். சென்னையில் சூளை பகுதியில் பல இடங்களை வாங்கி பராமரித்து வந்தார். இறைபக்தி காரணமாக இயற்கையாகவே அவரிடம் சித்தர்கள் மீதான ஈடுபாடும் இருந்தது. வட சென்னையில் உள்ள சித்தர் மடங்களுக்கு சென்று வருவார். குறிப்பாக 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மிக சிறப்பாக செயல்பட்ட வியாசர்பாடி கரபாத்திர சிவபிரகாச சுவாமிகள் மடம், சூளை ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள் மடம், பெரம்பூர் நேரு சுப்பையா சுவாமிகள் மடம், வண்ணாரப்பேட்டை நாராயண தேசிகர் மடம் போன்ற மடங்களுக்கு சென்று வருவார். இந்த மடங்களில் வேதங்கள் அனைத்தும் தமிழ் குலகுரு முறையில் தமிழில் மேலும் மொழிபெயர்க்கப்பட்டு கற்பிக்கப்பட்டு வந்தன. இதையெல்லாம் கண்ட த.ப.ராமசாமி பிள்ளைக்கு வேதங்கள் அனைத்தையும் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. தொல்காப்பியம், திருமந்திரம், பொய்யாமொழி உள்பட பல தமிழ் இலக்கியங்களில் வேதங்கள் மிகவும் போற்றப்பட்டுள்ளன. ஆனால் அவை தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் இருந்தது. இதுபற்றி எல்லாம் த.ப.ராமசாமி பிள்ளை சிந்திப்பார். ஆனால் செயல்பட முடியாமல் இருந்தது. ஒருநாள் அவர் வியாசர்பாடி கரபாத்திர சிவபிரகாச சுவாமிகளின் மடத்திற்கு சென்றிருந்தார். அங்கு காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகள் வந்திருந்தார். அவரை த.ப.ராமசாமி பிள்ளை சந்தித்து பேசினார். அப்போது வியாசர்பாடி கரபாத்திர சிவபிரகாச சுவாமிகள் மடத்தில் பொறுப்பாளராக இருந்த முக்தானந்த சுவாமிகள் ஒரு யோசனையை வெளியிட்டார். த.ப.ராமசாமி பிள்ளையும், காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் வேதங்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட முடியும் என்று கூறினார். இதற்கு த.ப.ராமசாமி பிள்ளை உடனடியாக சம்மதம் தெரிவித்தார். 1930-ம் ஆண்டு வாக்கில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பல்வேறு மொழிகளிலும் வெளிவந்த வேத உரைகளையும், வேத ஆகமங்களையும், நிகண்டு, நிறுத்தம் போன்றவற்றையும் சென்னைக்கு வரவழைத்தார். அந்த நூல்களை கொண்டு திருவொற்றியூரான் வேத மொழிபெயர்ப்பு காரியாலயம் என்ற பெயரில் கல்லூரி ஒன்றை தொடங்கினார். அங்கிருந்து காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகள் மொழிபெயர்ப்பு பணிகளை மேற்கொண்டார். முதலில் சாம வேதங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. இந்த மொழிபெயர்ப்புப் பணியில் காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகளுக்கு உதவி செய்தவதற்காக புலமைப்பெற்ற ஏராளமான பண்டிதர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாத சம்பளம் கொடுக்கும் பொறுப்பையும் த.ப.ராமசாமி பிள்ளை ஏற்றுக் கொண்டார். இதன் பயனாக விரைவில் சாம வேதங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. அவை மிக உயர்ந்த ரக தாளில் அச்சிடப்பட்டு நேர்த்தியான புத்தகங்களாக கொண்டுவரப்பட்டன. ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு அவை அனைத்தையும் த.ப.ராசாமி பிள்ளை தமிழர்களுக்கு இலவசமாக வழங்கினார். அந்த புத்தகங்களை அவர் வெளியிடும் போது 1934-ம் ஆண்டு திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தில் மிகப்பெரிய விழாவாக நடத்தினார். அந்த ஆலயத்தில் எழுத்தறியும் பெருமானுக்காக அழகிய வேலைபாடுகளுடன் கற்கோவிலை கட்டினார். அதில் பத்திரகிரியார், வள்ளலார், பட்டினத்தார் ஆகியோரது விக்கிரகங்களை நிறுவினார். வடமேற்கு மூளையில் அமைந்த அந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி அன்றைய தினம் தனது சாமவேத மொழிபெயர்ப்பு நூலை அறிமுகம் செய்தார். அரும் பாடுபட்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து அவர் வழங்கிய அந்த நூலை தமிழர்கள் கண்டுகொள்ள வில்லை என்பதுதான் மிகப்பெரிய துரதிர்ஷ்டம். என்றாலும், மனம் தளராத த.ப.ராமசாமி பிள்ளை எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் தங்களது எழுத்துக்களை புத்தகங்களாக வெளியிட தனது பதிப்பகத்தில் உதவி செய்தார். இவை அனைத்துக்கும் மேலாக ஆன்மிக பணியில்தான் அவரது கவனம் அதிகளவில் இருந்தது. இதனால் தனது மொழிபெயர்ப்பு அலுவலகத்தை பள்ளிக்கூடமாக மாற்றினார். வேப்பேரியில் உள்ள திருவொற்றீஸ்வரர் இலவச உயர்நிலை பள்ளி அந்த வகையில் உருவானதுதான். இன்றுவரை இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி, உடை, உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓட்டேரியில் இயங்கி வரும் திருவொற்றியூரான் அரசு நெஞ்சக மருத்துவமனை அந்த காலத்தில் த.ப.ராமசாமி பிள்ளையால் தானமாக அளிக்கப்பட்ட இடத்தில் இருக்கிறது. கல்வி, மருத்துவம், ஆன்மிகம் போன்றவற்றில் மக்களுக்கு சேவை செய்வதற்காக தனது சொத்துக்களில் பெரும்பகுதியை அவர் தியாகம் செய்துள்ளார். குறிப்பாக திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி ஆலயத்துக்கு அவர் செய்துள்ள சேவைகள் நிகரற்றவை. சித்த புருஷர்களுக்கும் அவர் சேவைகள் செய்து, சித்தராகவே தன்னை மேம்படுத்திக் கொண்டிருந்தார். இப்படி இலக்கியத்துக்கும் இறைவனுக்கும் தொண்டு புரிந்த இந்த மகான் உயிர் நீத்த பிறகு அவரை நினைவு கொள்ள திருவொற்றியூரான் அடிமை என்ற பெயரிலேயே ஜீவசமாதி செய்யப்பட்டார். அவரது ஜீவசமாதி திருவொற்றியூர் கடற்கரை அப்பர் சாமி கோவில் அருகில் தனி ஆலயம் போல உருவாக்கப்பட்டுள்ளது. வட சென்னையில் சித்தர்களை பார்வையிட செல்லும் போது இந்த மகானையும் தரிசிப்பது நல்லது.