ஸ்ரீமத் நடேசன் சுவாமிகள் 101 ஆண்டுகள் வாழ்ந்தவர். கண்ணுக்கு தெரியாத அதிசயங்களை இவர் செய்திருக்கிறார். ஆனால் கடுகளவு கூட அதுபற்றி அவர் யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. எப்போதும் அமைதியான சுபாவத்தில் இருந்ததாலோ என்னவோ அவரது ஜீவ சமாதியிலும் எப்போதும் நிசப்தம் இருந்துகொண்டே இருக்கிறது. இது தியானம் செய்பவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். 24 மணிநேரமும் வாகனங்கள் இரைச்சல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் பகுதியில் இவ்வளவு ஆத்மார்த்தமான அமைதியான ஒரு சித்தர் ஜீவசமாதி இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தான்.
ஸ்ரீமத் நடேசன் சுவாமிகள் திருவண்ணாமலை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். அந்த மாவட்டத்தில் உள்ள சேரந்தாங்கல் என்ற ஊரில் பிறந்தவர். மிக மிக சாதாரண குடும்பத்தில் பிறந்த இந்த மகான் தனது 13-வது வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த அவர் கடைசியாக சென்னைக்கு வந்து சேர்ந்தார். அந்த காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்துகொண்டு இருந்தது. சென்னைக்கு வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வடசென்னையில் தான் குடியேறுவார்கள். அந்த வகையில் நடேசன் சுவாமிகளும் வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியேறினார்.
பல்வேறு வேலைகள் செய்துகொண்டு காலத்தை கழித்து வந்த அவருக்கு அண்ணா சாலையில் உள்ள ஜிம்கானா கிளப்பில் வேலை கிடைத்தது. அந்த கிளப்பில் உள்ள தோட்டங்களை பராமரிப்பதுதான் அவரது வேலை. தோட்ட வேலைகளை செய்துகொண்டு அவர் அந்த ஜிம்கானா கிளப்பின் உள்ளேயே ஒரு பகுதியில் தங்கி இருந்தார். அந்த காலக்கட்டத்தில் அந்த பகுதி (தீவுத்திடல்) மிகப்பெரிய வனமாக இருந்தது. ஜிம்கானா கிளப்பில் இருந்து ஒற்றையடி வழித்தடம் தான் பல்வேறு பகுதிகளுக்கும் பிரிந்து சென்றது. தற்போது தலைமை செயலகம் இருக்கும் கட்டிடம் ஆங்கிலேயர்களின் நிர்வாக தலைமையிடமாக இருந்தது. ஜிம்கானா கிளப்பில் இருந்து அந்த தலைமை அலுவலக இடத்துக்கு செல்ல சற்று அகலமான பாதை அமைத்து இருந்தனர்.
காலையில் தோட்டவேலை செய்யும் நடேசன் சுவாமிகள் மதியத்திற்கு பிறகு ஆன்மீகத்தில் இறங்கிவிடுவார். மாலை நேரத்தில் ஜிம்கானா கிளப்பில் இருந்து வெளியேறி தீவுத்திடல் பகுதியில் காலார நடந்துவிட்டு வருவார். ஒரு சமயம் அவர் அப்படி நடந்து சென்றுகொண்டிருந்த போது தற்போது குதிரை சிலை இருக்கும் பகுதியில் அவருக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. அந்த இடத்தில் மிகப்பெரிய வேப்பமரம் ஒன்று இருந்தது. அந்த வேப்பமரத்தடியில் எங்கிருந்தோ வந்த ஒரு சாமியார் கண்ணை மூடி ஆழ்ந்த தவத்தில் ஆழ்ந்து இருந்தார். அவர் முன்பு மிகபெரிய விளக்கு ஒன்று எரிந்துகொண்டு இருந்தது. இதைக் கண்டதும் நடேசன் சுவாமிகள் தன்னையும் அறியாமல் அந்த மரத்தடி சாமியாரை பார்த்து வணங்கினார். அப்போது அவருக்குள் ஏதோ மனநிலையில் ஒரு மாற்றம் ஏற்படுவது போல உணர்ந்தார். மறுநாளும் சாயங்காலம் அதே இடத்தில் அதே சாமியாரை நடேசன் சுவாமிகள் கண்டார். அன்று அந்த சாமியார் கண்ணை திறந்து நடேசன் சுவாமிகளை பார்த்தார் மெலிதாக சிரித்தார். அது நடேசன் சுவாமிகளுக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதப்படுகிறது. ஆனால் நடேசன் சுவாமிகள் அதை பெரிதாக நினைக்கவில்லை. 3-வது நாள் சாயங்காலமும் நடேசன் சுவாமிகளுக்கு அந்த மரத்தடி சாமியாரை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மிகவும் ஆவலுடன் அந்த வேப்பமரத்தடிக்கு சென்றார். அங்கு அவருக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது. அங்கு சாமியாரை காணவில்லை. ஆனால் அந்த சாமியார் ஏற்றி வைத்திருந்த தீபம் மட்டும் எரிந்து கொண்டே இருந்தது. அதை வணங்கி விட்டு நடேசன் சுவாமிகள் திரும்பிவிட்டார். மறுநாளாவது மரத்தடி சாமியார் இருப்பாரா என்று சந்தேகத்துடன் நடேசன் சுவாமிகள் சென்றார். அங்கு அன்றும் மரத்தடி சாமியாரை காணவில்லை. அதன்பிறகு அவர் திரும்பி வரவும் இல்லை. அப்போதுதான் அந்த சாமியார் தனக்கு ஏதோ ஒரு பணியை சூசகமாக சொல்லி சென்றிருக்கிறார் என்பதை நடேசன் சுவாமிகள் உணர்ந்தார். அந்த வேப்பமரத்தடியில் தீபம் ஏற்றி வைத்து வழிபட தொடங்கினார். அந்த வேப்பமரத்தடியில் ஏற்றி வைத்த தீபம் நடேசன் சுவாமிகளின் மனதிற்குள் ஆத்ம ஞான ஒளியை பிரகாசிக்க செய்தது. இந்த காலக் கட்டத்தில் ஸ்ரீ நடேசன் சுவாமிகளுக்கு திருமணம் நடைபெற்றது. குன்றத்தூர் செல்லும் வழியில் உள்ள கோவூரை சேர்ந்த ராஜம்மா என்ற பெண்மணியை அவர் திருமணம் செய்து கொண்டார். இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டாலும் அவரது ஆன்மீகத்தில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. மாறாக ஆன்மீகத்தை நோக்கி அவரது பயணம் மிக வேகமாக இருந்தது. 4 மகன்கள், ஒரு மகளை பெற்றெடுத்த நிலையில் அந்த வேப்ப மரத்தடி பகுதியை விட்டு நடேசன் சுவாமிகள் விலகவில்லை. அங்கேயே இருந்து தியானத்தில் மூழ்கினார். அப்போதுதான் அம்பாள் அவரை ஆட்கொள்ள நேரிட்டது. சக்தி அருள் பெற்ற அவர் அம்மனுக்கு சிலை வடித்தார். அந்த அம்மனுக்கு வீரகன்னியம்மன் என்ற பெயரையும் சூட்டினார். அதை அந்த பகுதியில் பிரதிஷ்டை செய்து தினமும் அபிஷேக ஆராதனை செய்து வழிபட தொடங்கினார். வீரகன்னியம்மன் சக்திவாய்ந்த அம்மனாக திகழ்வதை இன்றும் பலர் கண்கூடாக, அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொண்டு இருக்கிறார்கள். நடேசன் சுவாமிகள் மூலம் வீரகன்னியம்மன் பலரது வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தினாள். இதனால் நடேசன் சுவாமிகள் பற்றிய தகவல்கள் அந்த காலக்கட்டத்தில் சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் பரவியது. ஏராளமானோர் தினமும் தீவுத்திடல் பகுதிக்கு வந்து ஸ்ரீமத் நடேசன் சுவாமிகளை பார்த்து ஆசி பெற்று சென்றனர். ஸ்ரீமத் நடேசன் சுவாமிகள் குறிசொல்வது போன்று எதுவும் சொன்னதே கிடையாது. பிரச்சினை என்று வருபவர்களுக்கு திருநீறு கொடுப்பார். அந்த திருநீறு தோசங்களை நீக்கும் மகத்துவமான மந்திரமாக திகழ்ந்தது. மகன்கள், மகளை திருமணம் செய்து கொடுத்த பிறகும் ஸ்ரீமத் நடேசன் சுவாமிகளின் ஆன்மீகசேவை தொடர்ந்து கொண்டே இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு தீவுத்திடல் பகுதி ராணுவ கேந்திரமாக மாற்றப்பட்டது. இதனால் வீரகன்னியம்மன் ஆலயத்தை அகற்றுமாறு ராணுவ உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதற்கு ஸ்ரீமத் நடேசன் சுவாமிகள் மறுத்தார். ஆன்மீக சேவை நடக்கும் பகுதியாகவும், எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காத இடமாகவும் அந்த இடம் திகழ்வதாக விளக்கினார். ஆனால் ராணுவ மூத்த அதிகாரி ஏற்கவில்லை. அன்று இரவே அனைத்து பகுதிகளும் இடித்து அகற்றப்படும் என்று அறிவித்தார். ஆனால் அவர் சொன்னபடி செய்ய இயலவில்லை. மறுநாள் காலை அந்த ராணுவ மூத்த அதிகாரி மனதில் மாற்றம் ஏற்பட்டு இருந்தது. வீரகன்னியம்மன் ஆலயத்தை சுற்றி சிறிது இடத்தை விட்டுவிட்டு ராணுவத்துக்கான மதில் சுவரை கட்டும்படி அனுமதித்தார். இதனால் ஸ்ரீமத் நடேசன் சுவாமிகளின் ஆன்மீக சேவை அதே இடத்தில் நீடித்தது. 1990-ம் ஆண்டு அவர் பரிபூரணம் அடைந்தார். 1889-ம் ஆண்டு பிறந்து 101 ஆண்டுகள் வாழ்ந்த அந்த மகானுக்கு வீரகன்னியம்மன் ஆலயத்தின் ஒரு பகுதியில் ஜீவசமாதி அமைக்கப்பட்டது. சிறிய சன்னதி போன்று அந்த ஜீவ சமாதி அமைந்துள்ளது. அந்த கருவறைக்குள் ஸ்ரீமத் நடேசன் சுவாமிகளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தினமும் காலையில் வீரகன்னியம்மனுக்கும், ஸ்ரீமத் நடேசன் சுவாமிகளுக்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 7-ந்தேதி குருபூஜை நடத்துகிறார்கள். மற்ற சித்தர் ஜீவசமாதிகளில் திதி நட்சத்திரத்தை கணக்கில் கொண்டு குருபூஜை நடத்துவார்கள். ஆனால் இங்கு நடேசன் சுவாமிகளுக்கு நவம்பர் மாதம் 7-ந்தேதி குருபூஜை என்பது நிரந்தரமான வழக்கமாக மாறியுள்ளது. பவுர்ணமி தோறும் இந்த ஜீவசமாதியில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. அந்த சமயத்தில் எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வந்து வழிபட்டு தியானம் செய்துவிட்டு செல்கிறார்கள். தங்களை சித்தர் கனவில் வந்து அழைத்ததாக சொல்லிக் கொண்டு பலதடவை பலர் வந்து சென்றுள்ளனர். நீண்ட தொலைவில் உள்ளவர்களை கூட நடேசன் சுவாமிகள் கனவு மூலம் வரவழைத்த அற்புதங்கள் நடந்துள்ளது. தற்போது இந்த ஜீவசமாதி ஆலயத்தை அவரது மகள் லட்சுமியும், அவரது கணவர் ரங்கசாமியும் அங்கேயே தங்கி இருந்து பராமரித்து வருகிறார்கள். லட்சுமியின் கனவிலும் அடிக்கடி ஸ்ரீமத் நடேசன் சுவாமிகள் வந்து வழிகாட்டி உள்ளார். இரவு நேரங்களில் வீரகன்னியம்மன் சன்னதியில் சலங்கை சத்தம் கேட்டுக் கொண்டே இருக்குமாம். அந்த அளவுக்கு அந்த ஆலய பகுதி அம்மன் சக்தியாலும், சித்தர் சக்தியாலும் அருள் அலைகள் மிகுந்ததாக உள்ளது. வாய்ப்பு இருப்பவர்கள் அங்கு சென்று தியானம் செய்துவிட்டு வந்தால் ஆன்மீக மேம்பாட்டுக்கான பலன் கிடைக்கும். மேலும் தகவல்களை 9382108544 என்ற எண்ணில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.