No results found

    சனி பகவானும் மனித வாழ்க்கையும்


    ஒருவரின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்களை ஜாதகத்தையும், தசா புத்தியையும் வைத்துதான் தெரிந்து கொள்ள முடியும். மேலும் ஒரு சம்பவம் எப்போது நடைபெறும் எப்படி நடைபெறும் என்பதை கோட்சார கிரகங்களே தீர்மானிக்கிறது. நவகிரகங்களின் பெயர்ச்சிகள் மாதம் ஒருமுறை, ஆண்டுக்கொருமுறை என அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே இருந்தாலும். சனி பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கால புருஷ தத்துவப்படி சனி பகவான் ஜீவனகாரகனாகவும், கர்ம அதிபதியாகவும் இருப்பதால் ஒருவரின் கர்மாவை நிர்ணயிப்பதில் சனிபகவானின் பங்கு அளப்பரியது. திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் ஜனவரி 17, 2023 அன்று மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு மாறுகிறார் என்பதால் இந்த கட்டுரையில் ஸ்ரீ சனி பகவான் பற்றிய சில தகவல்களைப் பார்க்கலாம்.

    பல ஜென்மங்களில் ஒருவர் செய்த பாவம், புண்ணியம் இவற்றின் ஆடிட்டிங் தீர்ப்பு தான் இந்த பிறப்பு. மனிதன் இப்பிறவியில் அனுபவிப்பது எல்லாம் கர்ம பலன்களே. இந்த கர்ம பலன்களை கொடுக்கும் கிரகம் கர்மகாரகன் சனி. அந்த தீர்ப்பை உலகிற்கு வழங்கும் நீதிபதியே சனி பகவான். தன் நிலையில் இருந்து வழுவாமல் பாரபட்சம் இன்றி தீர்ப்பை வழங்குகிறார் என்பதால் தான் துலாபாரத்தை ராசிச் சின்னமாக கொண்ட துலாம் ராசியில் சுவாதி நட்சத்திரத்தில் சனி பகவான் உச்சம் பெறுகிறார். சனி பகவானுக்கும் மனித வாழ்விற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. அவர் கொடுப்பதை தடை செய்யும் அதிகாரம் வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது.

    விதிப்படி, வினைப்படி சனி அவரவர் செயல்களுக்கு ஏற்ப கோட்சாரத்தில் தனது தீர்ப்புகளை தயங்காமல் வழங்கி வருகிறார். மனிதர்களை பிடிக்கும் சனி நவகிரகங்களின் பெயர்ச்சிகள் மாதம் ஒருமுறை, ஆண்டுக் கொருமுறை என அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே இருந்தாலும். சனி பெயர்ச்சிக்கு அனைவரும் அதிகம் பயப்படுகின்றார்கள். சனி கிரகம் ஒரு ராசியை கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது.ராசிச் சக்ரத்தை ஒரு சுற்று சுற்றி வர தோராயமாக 30 ஆண்டுகள் ஆகின்றது.அதனால் பெரியவர்கள் பேச்சு வழக்கில் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை 30 வருடம் தாழ்ந்தவரும் இல்லை என்பார்கள். அதாவது 30 வருடம் எந்த துன்பமும் இல்லாது வாழ்ந்த மனிதரும் இல்லை.30 வருடமும் இன்பமாக வாழ்ந்தவரும் இல்லை என்பதே இதன் பொருள். சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை குறைந்த பட்சம் 60 வருடம் என நிர்ணயம் செய்தால் 30 வருட காலம் சனி பகவானின் பிடியில் மட்டுமே மனிதர்களின் வாழ்க்கை இருக்கும்.

    கோட்ச்சாரத்தில் சனிபகவான் தரும் பலன்களை நான்கு வகையாக பிரிக்கலாம். ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டகச் சனி, அர்த்தாஷ்டம சனியாகும். ஏழரைச் சனி ஒருவருடைய சந்திரன் நிற்கும் ராசிக்கு, முன் ராசியிலும், சந்திரன் நிற்கும் ராசியிலும், அதற்கு அடுத்த ராசியிலும் கோட்சார சனி பகவான் சஞ்சாரம் செய்யும் காலம் தான் ஏழரைச் சனியாகும்.அந்த மூன்று ராசியினருக்கும் தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச் சனியாகும். ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் சனிபகவான் நிற்கும் காலம் ஏழரைச் சனியின் முதல் பகுதியாகும்.இதை விரையச் சனி எனலாம். பண இழப்பு,வேலை, தொழிலில் சிரமம், காரியத்தில் தடை தாமதம்,உடல் உபாதைகள் போன்ற அசவுகரியங்கள் இருக்கும்.

    அடுத்த பகுதியை ஜென்மச் சனி எனலாம். அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் மனப் போராட்டமாக இருக்கும். மனம் உளைச்சல்களாக இருக்கும். அடுத்த பகுதியை கழிவுச் சனி பாதச் சனி எனலாம். அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள் குறைந்ததாக இருக்கும். பொதுவாக ஒருவரது வாழ்நாளில் மூன்று முறை ஏழரைச் சனி வரும். ஏழரைச் சனி என்பது ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை நிகழும். இந்நிகழ்வில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று எனப்படும் மங்கு சனி, பொங்கு சனி, மரணச்சனி என மூன்று சுற்றுக்கள் இருக்கும். மங்கு சனி இளம் பருவத்தில் எதையும் தாங்கி கொள்ளக்கூடிய சூழ்நிலையில் சனிபகவான் தரும் அடி சற்று மெதுவாகவே விழும். இந்த முதல் சுற்றுக்கு மங்கு சனி என்று பெயர். மிக முக்கியமாக இந்த காலத்தில் ஒரு மனிதர் ஏழரைச் சனியின் கெடுபலன் தாக்கத்தை உணர்வது இல்லை. இன்னும் சொல்லப் போனால் சிலருக்கு அதீதமான பொருள் வரவும் கிடைக்கவே செய்கிறது. பொங்கு சனி வாலிபத்தின் நடுவில் வரும் இரண்டாவது சுற்று பொங்கு சனியாகும். ஜாதகரின் மற்ற கிரக அமைப்புகளைப் பொறுத்து இதன் பலன் இருக்கும்.ஒரு சிலருக்கு பொங்கு சனி விடைபெறும்போது மங்காத செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளி கொடுத்து விட்டு செல்லும்.திருமணம், குழந்தை,தொழில், வீடு வாகன யோகம் அனைத்தும் இந்த காலகட்டத்தில் தான் நடைபெறும். ஜனன கால ஜாதகப்படி சாதகமான தசா புத்தி இருந்தால் பல நன்மைகள் பெருகும். சாதகமற்ற தசா புத்தி நடந்தால் பரிகாரங்கள் செய்து வினையை குறைக்க முயல வேண்டும். மரணச்சனி இந்த சுற்றில் ஒரு ஜாதகருக்கு நிச்சயம் உடல் நலிவு ஏற்படுத்தும் மற்றும் மரணத்திற்கு இணையான துயரங்களை அனுபவிக்க வேண்டி வரும். தசை மற்றும் புத்தி இவைகள் ஜாதகருக்கு, சாதகமற்று இருக்கும் சூழலில் நிச்சயம் ஆரோக்கியத்தைக் கடைபிடிக்க வேண்டும். ஆயுள் ஹோமம் செய்வது நல்லது. அஷ்டமச் சனி ஒருவரது ராசிக்கு எட்டாவது இடத்தில் கோட்சார சனி சஞ்சாரம் செய்வது அஷ்டமத்துச் சனியாகும். அஷ்டமச் சனி காலத்தில் "நட்டதெல்லாம் பாழ், விழலுக்கு இரைத்த நீர், அந்நிய தேசத்திற்கு ஓடிப் போ" என்றெல்லாம் சொல்வார்கள். அதாவது இதன் பொருள் இந்த காலகட்டத்தில் புத்தி வேலை செய்யாது. மனரீதியாக மிகக் கடுமையான அழுத்தம் ஏற்படும். சிலருக்கு பில்லி, சூனியம் வைக்கப்பட்டதை போன்ற எதிர்மறையான உணர்வு இருக்கும். இதனால் நல்லவன் கெட்டவனாகவும் அறிவு தலைகீழாக மாறும். சிலருக்கு வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறும். உணர்ச்சி மட்டும் வேலை செய்யும். சொந்த ஊரில் இருந்தால் வீண் பிரச்சினைக்குள் சிக்குதல், பழிக்கு ஆளாகுதல் போன்றவை ஏற்படும். வேலை செய்யாமல் ஊர் சுற்றுவார்கள். காரணமே இல்லாமல் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிப்பார்கள். பிரச்சினை முடிந்த பிறகு அவர் மீது தவறில்லை என்று தெரியவரும். இதனால் தான் அகப்பட்டவனுக்கு அஷ்டமத்து சனி' என்ற பழமொழி உள்ளது. இரண்டரை வருடம் அஷ்டமத்து சனி வந்து போனவர்கள், நிதானமாக, யதார்த்தமாகப் பேசுவார்கள். ஞானி போல பேசுவார்கள்.அந்த அளவிற்கு சனி அவர்களை கசக்கி பிழிந்து காய வைத்துவிட்டு போய் விடும். ஏழரை ஆண்டுகளில் ஒரு மனிதனை பிடிக்கும் போது ஏற்படுத்தும் கஷ்ட நஷ்டங்களை இரண்டரை ஆண்டுகளில் நிகழ்த்துவார் என்பதால் ஏழரைச் சனியினால் ஏற்படும் பாதிப்பை விட அஷ்டமச் சனியினால் ஏற்படும் பாதிப்பு அதிகம். அர்த்தாஷ்டமச் சனி ராசிக்கு நான்கில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் காலமாகும். அஷ்டமச் சனியின் சிரமங்களில் சரி பாதியை அனுபவிக்க நேரும். திடீர் உடல் நல பாதிப்புகள் ஏற்படுத்தி மருத்துவ செலவுகள் ஏற்படுத்தும். அதனால் சேமிப்பு பணம் விரயமாகக் கூடிய நிலை ஏற்படும். சிலருக்கு தொழிலில் ஏற்ற இறக்கம் இருக்கும். கண்டக சனி ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் நிலையே கண்டகச் சனியாகும். எந்த ஒரு செயலை செய்ய சிறப்பான சூழல் இருந்தாலும் பல சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். இந்த காலத்தில் நாம் எண்ணியதை அதற்கான நேரத்தில் முடிப்பது சிரமம், சுப காரியங்கள் திட்டமிடுதல் நடக்காமல் போகலாம்.கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சரிவர இருக்காது. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் பிரிவுகள் ஏற்படும். பொதுத் தொண்டில் இருப்பவர்களுக்கும், மக்களுக்கும் இடையே பகை ஏற்படும். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே.சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார்.அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு.ஆகையால்தான் 'சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை' என்றும், 'சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்' என்றும் கூறுவார்கள். ஜாதகத்தில் எல்லா கிரகங்களுக்கும் தசா, புக்தி, அந்தரங்களுக்கு ஏற்ப பலன் தரும். ஆனால் சனீஸ்வரருக்கு மட்டும் தசா புக்திகளுடன், கோட்ச்சார பலமும் அதிகமாகும். எத்தனை பெரிய யோக ஜாதகமாக இருந்தாலும் அந்த ஜாதகத்திற்கு ஏற்ப சனி தனது தீர்ப்பை கொடுத்துதான் தீருவார். ஒருவர் செய்த பாவங்களும் அவருக்கு எப்படி திரும்ப கிடைப்பது என்றால் அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் சனி பகவான் தயவு தாட்சண்யமின்றி கடுமையாக தண்டிக்கிறார். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் எல்லோருக்கும் பாதிப்பு எல்லா காலத்திலும் தொடர்வது கிடையாது. சுருக்கமாக சந்திரன், ராகு, கேது, சனி,செவ்வாய் தசை புக்தி அந்தர காலங்களிலும், லக்ன ரீதியான 6,8,12-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை, புக்தி, அந்தர காலங்களிலும் பாதிப்பு மிகுதியாக இருக்கும். சாதகமான தசை, புக்தி நடப்பவர்களுக்கு நல்ல பலன்களே நடைபெறும். அதே போல் நவ கிரகங்களிலும் எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை செய்கின்ற அதிகாரம் உண்டு. ஆனால் சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கிறது. எந்த கிரக தசா புக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனிபகவானால் தான் பிரச்சினை வருகிறது என்பது பலரின் நம்பிக்கை. இது போன்ற மூட நம்பிக்கையை கைகழுவி உண்மையான காரணம் அறிந்து வழிபாடு செய்வது மிகச் சிறப்பு. ஸ்ரீ சனி பகவானின் பாதிப்பில் இருந்து விடுபட செய்யவேண்டிய பரிகாரங்கள் சங்கடஹர சதுர்த்தி தினத்தில், விநாயகப் பெருமானுக்கு எட்டு சிதறு தேங்காய்களை உடைத்து வழிபட்டால், சனியின் பாதிப்புகள் எல்லாம் சிதறி ஒடும். சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபட்டு விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்தால், நீண்ட ஆயுளுடன் வாழலாம். எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம் மிக எளிமையாக ஸ்ரீராமஜெயம் எழுதலாம்.

    Previous Next

    نموذج الاتصال