மனித வாழ்வின் மிக முக்கிய அங்கமான திருமணத்தை பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம், சுய விருப்ப விவாகம் என இரண்டாக வகைப்படுத்ததலாம். ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் விருப்ப திருமணமா? ஜாதகரின் விருப்ப திருமணமா என்பதை எளிதாக கூற முடியும். இன்று காதலர் தினம் என்பதால் இந்த கட்டுரையில் காதல், காதல் திருமணம் பற்றிய சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஐந்தாம் பாவகமும் காதலும் ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 5-ம் இடம், மனம் புத்தியைக் குறிக்கும். ஒருவரின் விருப்பு வெறுப்புகளைத் தெரிவிக்குமிடம். எனவே காதலிப்பவர்களுக்கு முதலில் 5ம்மிடம் வேலை செய்ய வேண்டும்.
பெரும்பான்மையாக ஐந்தாமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை புத்தி காலங்களில் அல்லது சுக்ரன், ராகு தசை புத்தி காலங்களில் ஒருவருக்கு காதல் ஏற்படும். அதே போல் ஒருவரின் ஜாதகத்தில் காதலுக்கான காரக கிரகம் புதன் மற்றும் 5,7-ம் பாவகத்தை வைத்தே ஒருவரின் திருமண வாழ்வைப் பற்றி கூற முடியும். 2,5, 7,11-ம் பாவக தொடர்பு மற்றும் புதன், கேதுவின் சம்பந்தம் வைத்தும் ஒருவரின் திருமணம் எத்தகையது என்பதை எளிதாக கூற முடியும். காதல் கிரகங்கள் 4-ம் அதிபதியோடு தொடர்பு ஏற்பட்டால் பள்ளி, கல்லூரி காலங்களிலும் ஒன்பதாம் பத்தாம் அதிபதிகளுடன் தொடர்பு ஏற்பட்டால் வேலை செய்யும் இடத்தில் அல்லது மத்திம வயதில் காதல் வரும்..
நவகிரகங்களும் காதலும் சூரியன் சூரியன் மனக்கோட்டை, கற்பனை, கனவுகளுக்கு காரக கிரகமாகும். ஒருவரின் ஜாதகத்தில் 5ம் பாவகத்துடன் சூரியன் சம்பந்தம் பெற்றால் காதல் பற்றிய பல விதமான கற்பனைகளும், கனவுகளும் இருக்கும். இதில் அந்தஸ்து மற்றும் கவுரவம் பற்றிய மிகைப்படுத்ததலான எதிர்ப்பார்ப்பு இருக்கும். தன் கனவிற்கும், கற்பனைக்கும் அந்தஸ்திற்கும் சமமான நபர் கிடைத்தால் மட்டுமே காதலிக்க துவங்குவார்கள். சந்திரன் சந்திரன் உடலையும், மனதையும் குறிக்கும் கிரகம். ஒருவரின் ஜாதகத்தில் ஜந்தாம் இடத்திற்கு சந்திரன் சம்பந்தம் பெற்றால் மன உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தங்கள் மன உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு நபரின் அன்பு கிடைத்தால் அவர்கள் மேல் காதல் வந்து விடும்.
செவ்வாய் செவ்வாய் வேகத்திற்கும், வீரத்திற்கும், தைரியத்திற்கும் காரககிரகம். ஐந்தாம் பாவகத்துடன் செவ்வாய் சம்பந்தம் இருந்தால் காதலிக்கும் தைரியம் வரும். செவ்வாய்க்கு சுப கிரக சம்பந்தம் இருந்தால் நல்ல தரமான நபருடன் காதல் ஏற்படுகிறது. அசுப கிரகம் சம்பந்தம் பெற்றால் தரமில்லாத, தகுதி குறைந்த நபருடன் காதல் உருவாகிறது. புதன் காதலுக்கான காரக கிரகம் புதன். ஒருவரின் புத்திசாலித் தனத்திற்கும், நுண்ணறிவிற்கும் காரக கிரகமான புதன் காதலிக்கும் போது மட்டும் மதியை இழந்து நிற்கும். எத்தனை வயதானாலும் புதன் தசை, புத்தி அந்தர காலங்களில் காதல் அவஸ்தையால் மன நோயாளியாகிறார்கள். குரு குரு மதிப்பிற்கும், மரியாதைக்கும் காரக கிரகம். குரு ஐந்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றவர்களுக்கு மரியாதைக்குரிய நபர்கள் மற்றும் கவுரவமான நபர்கள் மீது காதல் வரும். இவர்கள் கவுரவத்திற்கு பயந்து பெற்றோர்களுக்காகவும், உறவுகளுக்காகவும் தங்கள் காதலை வெளிப்படுத்துவதில்லை. வாழ்நாள் முழுவதும் தங்கள் காதலை ஆழ்மனதில் அசை போட்டுக் கொண்டே இருப்பார்கள். இது தான் காதலுக்கு மரியாதை. சுக்ரன் சுக்ரன் அழகிற்கும், ஆடம்பரத்திற்கும், காமத்திற்கும் காரக கிரகம். எந்த வயதினராக இருந்தாலும் சுக்ரன் தசை, புத்தி காலங்களில் அழகு, ஆடம்பரம்,காமம் போன்றவற்றினால் காதல் வருகிறது. சுக்ரனால் ஏற்படும் காதலில் பெரும்பாலும் ஆழமான அன்பு இருக்காது. பலர் போக்சோவில் தண்டனை அனுபவிப்பது, பல பெண்களிடம் தவறாக பழகுபவர்களுக்கு சுக்ரன், ராகு சம்பந்தம் இருக்கும். இவர்களின் காதல் திருமணத்தில் முடிவதில்லை, திருமணம் நடந்தாலும் தோல்வியைத் தழுவுகிறார்கள். சனி சனி துன்பத்திற்கும், துயரத்திற்கும் காரக கிரகம். ஐந்தாம் பாவகத்துடன் சனி சம்பந்தம் பெற்றால் தங்கள் துன்பம், கவலைகளில் ஆர்வம் செலுத்துபவர்கள் மீது காதல் கொள்கிறார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் வேலை பார்க்கும் இடத்தில் காதல் வருகிறது. இளம் பருவத்தில் வயது வித்தியாசமில்லாமல் ஏற்படும் காதல் நிறைவேறாது. காதலர்கள் பலர் நம்பிக்கை துரோகத்தால் உயிரை துறக்கிறார்கள். ராகு ராகு வேற்று மொழி பேசுதல் மற்றும் திருட்டுத்தனத்தைக் குறிக்கும் கிரகம். தவறான நபர்களிடம் காதல் கொள்ளுதல், ஏற்கனவே திருமணமானவர்களை காதலிப்பதையும் கூறும் கிரகம். ராகு. பலருக்கு திருமணத்திற்கு பிறகு ஏற்படும் மனச்சுமையை பகிர்ந்து கொள்ளும் தகாத உறவைத் தருகிறது. முகம் சுளிக்க வைக்கும் காதல் உறவை ஏற்படுத்துகிறது. கேது கேது ஞானத்திற்கும் பக்திக்கும், வேற்று மதத்திற்கும் காரக கிரகம் என்பதால் மதம் மாறிய காதலுக்கு வழி வகுக்கிறது. இவர்கள் காதலால் சட்ட நெருக்கடியை சந்திப்பவர்கள். காதல் கலப்புத் திருமணம் ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மண வாழ்க்கையை நிர்ணயிக்கும் இடம். ஐந்தாமிடம் காதலைக் குறிக்குமிடம். ஒன்பதாமிடம் மதம் மற்றும் இனத்தைப் பற்றிக் கூறுமிடம்.இந்த இடங்களும் இந்த இடத்தின் அதிபதிகளும் பலம் பெறுவதும் நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை ஆசை விருப்பம் காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். ஒருவரின் ஜாதகத்தில் 2,5,7,11-ம் பாவகங்கள் சம்பந்தம் பெற்றால் நிச்சயம் காதல் திருமணம் நடைபெறும். ஏழாம் அதிபதியுடன் சுக்கிரன் செவ்வாய் சனி இணைந்திருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதியை சுக்கிரன் செவ்வாய் சனி பார்த்தாலோ காதல் திருமணம் நடைபெறும். ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் அதன் அதிபதி, குரு பலம் குறைந்தால் கலப்பு திருமணம் நடைபெறும். ராகு கேது கிரகங்கள் பிற மதத்தினரை குறிக்கும். இந்த இரண்டு கிரகங்களும் ஐந்து, ஏழு அதிபதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பது இணைவது சுக்கிரனுடன் ராகு கேது இணைவது வேறு மதத்தினருடன் திருமணம் செய்யும் நிலை ஏற்படும். தடம் மாறும் காதல் திருமணம் 5,7-ம் இடங்களில் சுக்கிரன் சனி செவ்வாய் இணைந்திருப்பதும் சுக்கிரன் ராகு தொடர்பு ஏற்படுவதும் காதல் திருமணத்திற்கான ஜாதக அமைப்பாகும். ஜாதகத்தில் ஏழாம் இடத்திலோ ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள் சேர்ந்தாலும் பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர் தனித்தனி பாதையில் போகும் நிலை ஏற்படும். சுய ஜாதகத்தில் 2,5,7,12- ம் இடம் சம்பந்தம் பெற்றால் காதல் திருமணத்தில் முடியாது. திருமணத் தோல்வி ஜாதக அமைப்பு லக்னத்தில் இருந்து 1, 2, 4, 7, 8, 12-ம் இடத்தில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற பாவ கிரகங்கள் சம்பந்தம் பெற்றால் களத்திர தோஷமாகும். சுக்கிரன், செவ்வாயுடன் சனி, ராகு, கேது சேர்ந்து இருந்தாலும் 7-ம் இடத்தில் பாவ கிரகங்கள் நின்றாலும் பாதகமான களத்திர தோஷமாகும். களத்திர தோஷம் உள்ள ஜாதகர்கள் அதே ஜாதக அமைப்புள்ள ஜாதகரை திருமணம் செய்து கொள்வது சிறப்பு. களத்திர தோஷம் உள்ளவர் களத்திர தோஷம் இல்லாதவரை திருமணம் செய்தால் பாதிக்கப்பட்ட கிரகத்தின் தசா, புத்தி காலங்களில் பிரிவினை உண்டாகும். சுக்கிரன், செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் காதல், காமம், எதிர்பாலின ஈர்ப்பு என்ற மூன்றையும் கொடுக்க கடமைப்பட்டவர். இந்த கிரகங்களின் தசை, புத்தி காலங்களில் ஏற்படும் காதல் திருமணங்கள் பிரிவினை தரும். காதல் திருமணம் சிறப்பானதா? பெற்றோர்களால் நடத்தப்படும் திருமணத்தில் சறுக்கல் ஏற்பட்டால் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் மற்றும் தன் இனத்தவரால் நியாயம் கிடைக்க செய்ய முடியும். சமூதாய அங்கீகாரமும் உண்டு. காதல் திருமணத்திற்கு உறவுகளின் ஆதரவோ, சமுதாய அங்கீகாரமோ நியாய, தர்மமோ இருக்காது. பெற்றோர்கள் குழந்தைகளின் மேல் வைத்திருக்கும் அதிகப்படியான நம்பிக்கை, அன்பு, செல்போன் இந்த மூன்றும் தான் பிள்ளைகளின் தவறான காதலுக்கு காரணம். பிள்ளைகளின் திருமண காலம் அறிய ஜோதிடரை அணுகிய பெற்றோர்கள் தற்போது என் குழந்தை தவறான நட்பில் உள்ளது இது சரியாகுமா? சரி செய்ய முடியுமா? என்று கேட்கிறார்கள். ஒரு பிள்ளை தவறான நட்பில் ஈடுபடுகிறது என்றால் அதற்கு 2 காரணங்கள் இருக்கின்றன. 1. குழந்தைகளின் மேல் உள்ள அதீத அன்பால் அவர்கள் செய்யும் எல்லா செயலையும் பெற்றோர்கள் ஆதரிப்பது அல்லது கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். 2. பல குடும்பங்களில் கணவன்-மனைவி கருத்து வேறுபாட்டால் குழந்தைகளை முறையாக பராமரிக்காததால் குழந்தைகள் தவறான நண்பரை தேர்வு செய்கிறார்கள். மூன்றாவது வகை ஒன்று உள்ளது. பணக்கார வரன் என்றால் அந்த வரனை முடிப்பதில் ஆர்வமும் பண வசதி இல்லாத வரன் என்றால் அதை உதாசீனமும் செய்கிறார்கள். பணத்திற்காக தவறை கண்டு கொள்ளாததால் அது விவாகரத்து வரை செல்கிறது. அதே போல் பிள்ளைகளை மட்டும் தவறாக கூற முடியாது. சில குழந்தைகளின் ஜனன ஜாதகத்தில் தவறான நட்பிற்கான கிரக சேர்க்கை இருக்கும் . ஆனால் கோச்சாரமும் தசா புத்தியும் சாதகமாக இல்லாத போது ஜனன கால ஜாதக அமைப்பை வைத்துக் கொண்டு 24 மணி நேரமும் குழந்தையின் செயல்களை கண்காணித்து மனதை நோகடித்து தவறான பாதையில் ஈடுபட வைத்து விடுகிறார்கள். நாட்டில் 80 சதவீதம் காதல் திருமணம் தோல்வியாகவே முடிகிறது. இதில் 10சதவீதம் பேர் உண்மையாக வாழ்பவர்கள் . மீதம் உள்ள 10 சதவீதம் பேர் தோல்வியை வெளிக்காட்டாமல் நன்றாக வாழ்வது போல் நடிக்கின்றனர். சிலர் வயிற்றில் குழந்தையுடனும், சிலர் கையில் குழந்தையுடனும் விவாகரத்துக்கும் மறு திருமணத்திற்கும் ஒடிக்கொண்டு இருக்கிறார்கள். மறு விவாகமும், விவாகரத்தும் ஒருவரை நிம்மதியாக வாழ விடாது. அதனால் பெற்றோர்களே குழந்தைகளின் நண்பர்களாக இருந்து குழந்தைகளை நல்வழிப் படுத்துங்கள். பிள்ளைகளே பெற்றோர்களின் ஆலோசனைகளை பின்பற்றுங்கள் இதுவே நமக்கு என்றும் நன்மை தரும். பரிகாரம்: குழந்தைகளின் தவறான நட்பால் பிரச்சினைகளை சந்திக்கும் பெற்றவர்கள் வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுகிழமைகளில் ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபட வேண்டும்.