No results found

    சென்னை சித்தர்கள்: குருசித்தர்-புதுவண்ணாரப்பேட்டை


    வடசென்னையில் 50-க்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவசமாதிகள் உள்ளன. இதில் சிவாலயத்துக்குள் அமைந்துள்ள ஒரே ஜீவசமாதி என்ற தனி சிறப்பை பெற்றிருக்கும் ஜீவ சமாதி புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் அருகே உள்ள குருசித்தரின் ஜீவசமாதிதான். பொதுவாக ஜீவசமாதிகள் தனி ஆலய அமைப்பில் இருக்கும். அங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடத்தப்படும். ஆனால் குருசித்தர் மட்டும் சிவாலயத்துக்குள் உள் மண்டபத்தில் இடம்பிடித்துள்ளார். அவர் வழிபட்ட லிங்கங்களை உள்ளடக்கி ஆலயம் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். வட சென்னையில் உள்ள மிக மிக பழமையான சித்தர்களில் குருசித்தரும் ஒருவர் ஆவார். இவர் சென்னையில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவரது பூர்வீகம் பற்றி உறுதியான எந்த தகவல்களோ, ஆவண பதிவுகளோ யாரிடமும் இல்லை. எல்லோரும் இவரை தாத்தா என்றே அழைக்கிறார்கள்.

    இவரைப் பற்றிய முழுமையான எந்த தகவல்களும் யாருக்கும் தெரியாது. அவர் ஜீவசமாதி ஆகியிருக்கும் இருக்கும் இடம் அந்த கால கட்டத்தில் தங்கசாலை பகுதியில் வசித்த ராசாத்தி அம்மாள், குழந்தைவேலு குடும்பத்தினருக்கு உரியதாகும். ராசாத்தி அம்மாள் குடும்பத்தினர் மிகப்பெரிய பணக்காரர்கள். வடசென்னையில் பல ஏக்கர் இடம் அவர்களுக்கு சொந்தமாக இருந்தது. அதில் தற்போது குருசித்தர் ஐக்கியமாகி இருக்கும் இடம் 6 ஏக்கரில் நந்தவனமாக இருந்த இடமாகும். இந்த நந்தவனத்துக்கு ராசாத்தி அம்மாள் குடும்பத்தின் மூதாதையர்கள் வில் வண்டியில் வாரத்துக்கு ஒருமுறை வந்து செல்வது வழக்கம்.

    அப்படி அவர்கள் ஒரு வாரம் சென்றபோது அங்கு ஒரு சாமியார் மரத்தடியில் கண்மூடி மவுனமாக அமர்ந்திருப்பதை பார்த்தனர். அவர் ராசாத்தி அம்மாள் மூதாதையர்களிடம், 'நான் இங்கு இருந்து கொள்ளட்டுமா?' என்று கேட்டிருக்கிறார். அவர்களும் நந்தவனத்தை பராமரிக்க ஒருவர் வேண்டுமே என்று அந்த சாமியாருக்கு அனுமதி கொடுத்தனர். அங்கு குடில் அமைத்து அந்த சாமியார் தங்கினார். சித்த வைத்தியங்களில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றிருந்த அவர் அங்கிருந்த குளத்தில் குளித்துவிட்டு தினமும் காலை நந்தவனத்தில் இருக்கும் பூக்களை பறித்து வந்து சிவ பூஜைகள் செய்யத் தொடங்கினார். அவருக்கு அங்குள்ள குளத்தில் இரண்டு லிங்கங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதை அவர் நந்தவனத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

    காளத்தீஸ்வரர், ஜலகண்டேஸ்வரர் என்ற பெயரில் அந்த இரு லிங்கங்களும் அந்த பகுதி மக்களால் வழிபடப்பட்டன. ஆலயம் இருந்தால் பாதுகாப்புத்தானே என்று கருதி ராசாத்தி அம்மாள் மூதாதையர்களும் அந்த ஆலய திருப்பணிகளை செய்தனர். தினமும் அந்த லிங்கங்களுக்கு அங்கிருந்த சாமியார் விளக்கேற்றி பூஜைகள் செய்தார். அதோடு தன்னை நாடி வந்தவர்களின் நோய்களை தீர்த்தார். பிறகு அவர் நாளடைவில் அற்புதங்கள் நிகழ்த்தினார். மணலை அள்ளி எடுத்துக்கொடுத்து உணவு பொருட்கள் ஆக்கினார். குளத்து தண்ணீரை எடுத்து தெளித்து நோய்களை விரட்டினார். அவர் பார்வை பட்டாலே போதும்... தோஷங்கள் விலகியதை மக்கள் உணர்ந்தனர். அதன்பிறகுதான் அவர் மாபெரும் சித்தர் என்பதை ராசாத்தி அம்மாள் மூதாதையர்களும், திருவொற்றியூர் பகுதி மக்களும் அறிந்து மரியாதை செலுத்தினார்கள்.

    ஒரு கால கட்டத்தில் அந்த சித்தர் தனது ஆத்மாவை பிரித்துக்கொண்டு முக்தி பெற்றார். அவரை அங்கேயே ஜலகண்டேசுவரர் அருகில் ஜீவசமாதி செய்தனர். அதன்பிறகும் அந்த ஜீவசமாதியில் அவர் உயிர்ப்புடன் இருப்பது பலதடவை நிரூபணமானது. இதனால் அந்த ஜீவ சமாதியை ராசாத்தி அம்மாள் மூதாதையர்கள் தொடர்ந்து பராமரித்து வழிபட்டு வந்தனர். ராசாத்தி அம்மாளும் தனது காலத்தில் அங்கு வாரத்துக்கு ஒரு முறை சென்று வழிபட்டார். அவருக்கு வாரிசு இல்லாததால் தனது மருமகன் மூலம் ஆலயப் பணிகளை செய்து வந்தார். அவரது மருமகனுக்கும் வாரிசு இல்லாததால் அந்த சிவாலயம் அறக்கட்டளை ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் உரிய பராமரிப்பு இல்லாததால் அந்த ஜீவசமாதி நாளடைவில் புதர்மண்டி போகும் அளவுக்கு மாறிப்போனது. விஷப் பாம்புகள் அதிகளவு நடமாடின. இதனால் ஒரு காலகட்டத்தில் பொதுமக்கள் அங்கு செல்லவே பயந்தனர். சுதந்திரத்துக்கு பிறகு வடசென்னை வளர்ச்சிபெற்ற நிலையில் அந்த ஆலயம் இருந்த பகுதி சுற்றிலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. மிஞ்சிய சிறு இடத்தில் தற்போது அந்த டோல்கேட் விவாலயம் உள்ளது. பலரும் அந்த சிவாலயத்தை சீரமைத்து மேம்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. இந்த நிலையில் அங்கு அடங்கி இருக்கும் குருசித்தர் சமீப காலமாக தன்னை வெளிப்படுத்தத் தொடங்கி இருக்கிறார். அவரது மகிமையை உணர்ந்து பலரும் அவரை வழிபட வரத் தொடங்கி உள்ளனர். இந்த ஆலயத்துக்குள் நுழைந்ததும் முதலில் காளத்தீஸ்வரர் சன்னதியை வழிபடலாம். அதன் பின்னால் சற்று இடைவெளியில் ஜலகண்டேசுவரர் சன்னதி அமைந்திருக்கிறது. அங்குதான் குருசித்தர் ஐக்கியமான இடம் இருக்கிறது. வடக்கு திசை நோக்கி அவரது விக்கிரகம் இருப்பதால் அவரை குருசித்தர் என்று அழைக்கிறார்கள். சிலர் அவரது பெயர் பட்டி பரதேசி சுவாமிகள் என்று சொல்கிறார்கள். ஆனால் அவரது உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. இதனால் பலரும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக அந்த சித்தரை கருதி தாத்தா என்றே அழைக்கிறார்கள். அவர் ஐக்கியமாகி இருக்கும் இடத்துக்கு அருகில் சென்றாலே போதும் மிக பலமான அதிர்வலைகள் இருப்பதை உணர முடியும். யாருக்காவது தோஷங்கள் ஏற்பட்டு இருந்தாலோ அல்லது காத்து, கருப்பு பிடித் திருந்தாலோ குருசித்தர் ஐக்கியமான இடத்துக்கு அருகில் சென்றதும் எல்லாம் விலகி ஓடி விடுவதாக நம்பிக்கையோடு பக்தர்கள் சொல்கிறார்கள். இப்போதும் பல பக்தர்களின் கனவில் காட்சியளித்து அவர் அருள் பாலித்துள்ளார். அவர் கனவில் தோன்றியதை வைத்துதான் அவரது உருவப்படத்தை சுவரில் வரைந்துள்ளனர். தினமும் இரவு நேரங்களில் குருசித்தர் அந்த ஆலய வளாகத்துக்குள் நடமாடுவதாக சொல்கிறார்கள். புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஒருவர் அந்த பகுதியில் ரோந்துக்கு சென்றபோது சித்தர் நடமாட்டத்தை பார்த்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்திருக்கிறார். ஒரு தடவை ஆலயத் திருப்பணிக்காக கும்பகோணத்தில் இருந்து வந்திருந்த 16 ஸ்தபதிகள் ஜலகண்டேசுவரர் சன்னதிக்கு அருகே இரவில் படுத்துத் தூங்கினார்கள். நள்ளிரவில் யாரோ ஒருவர் எட்டி உதைப்பது போல உணர்ந்து அனைவரும் அலறி அடித்து எழுந்துள்ளனர். அப்போது அசரீரியாக, 'ஒரு ஓரமாக படுத்துத் தூங்குங்கள்' என்று சித்தரின் குரல் கேட்டுள்ளது. மறுநாள் இதை ஸ்தபதிகள் மிகுந்த ஆச்சரியத்தோடு தெரிவித்தனர். அதுபோல தற்போது ஆலயத்தை பராமரித்து வருபவர்களில் ஒருவரான நாகலிங்கம் என்பவரிடமும் குருசித்தர் தனது அற்புதத்தை நிகழ்த்தி உள்ளார். ஒரு தடவை அவர் வீட்டில் இருந்தபோது யாரோ கன்னத்தில் அறைந்தது போல இருந்ததாம். திடுக்கிட்டபோது, 'ஆலயத்துக்கு செல்' என்று சித்தர் உத்தரவிட்டுள்ளார். நாகலிங்கம் ஆலயத்துக்கு ஓடி வந்தபோது பசுமாடு கன்று போட முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதை பார்த்து காப்பாற்றி இருக்கிறார். இதுபோல தற்போது சித்தருக்கு பூஜைகள் நடத்தி வரும் சிவபாலன் மூலமாகவும் அருள் வாக்குகளை குருசித்தர் வெளிப்படுத்துகிறார். 5 எலுமிச்சம் பழம், ஒரு மூக்குப்பொடி பாக்கெட், மல்லிகை பூ, ஊதுவத்தி, சோன்பப்டி ஆகியவற்றை வாங்கி கொண்டுவந்து குருசித்தருக்கு படைத்து கோரிக்கைகளை சொன்னால் அதை அவர் நடத்தி தருவதாக வடசென்னை பகுதி மக்கள் நம்பிக்கையோடு சொல்கிறார்கள். வியாழக்கிழமைகளில் குருசித்தருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. அப்போது பூஜை வைப்பவர் மூலமாகவும் குருசித்தர் பேசும் அதிசயம் நடக்கிறது. நம்பிக்கையோடு குருசித்தரை அணுகினால் நிச்சயம் நல்லதே நடக்கும் என்று சொல்கிறார்கள். வடசென்னையில் உள்ள விவரம் தெரிந்த வியாபாரிகள் தங்களுக்கு ஏதேனும் தொழில் ரீதியாக கஷ்டம் வந்தால் ஒரே ஒரு மூக்குப்பொடி பாக்கெட் மட்டும் எடுத்துவந்து குருசித்தர் அருகில் வைத்துவிட்டு குறைகளை சொல்லி செல்கிறார்கள். அந்த குறைகள் ஓரிரு நாளில் தீரும் அதிசயமும் நடக்கிறது. இந்த ஆலயத்தில் திருமணம் செய்துகொண்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு என்ற அற்புதமும் நடக்கிறது. கல்விக்கு இந்த சித்தர் அதிக முக்கியத்துவம் கொடுத்து உதவுவதாக சொல்கிறார்கள். எனவே குருசித்தரை நாடி வரும் மாணவ-மாணவிகள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சிவராத்திரி தினத்தன்று இவருக்கு குருபூஜை நடத்துகிறார்கள். அன்றைய தினம் மிகப்பெரிய அருள் அலை அந்த ஆலயத்தில் நிரம்பி வழிவதை பலரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்து மகிழ்ந்துள்ளனர். இந்த ஆலயத்துக்குள் இருக்கும்போது சுருட்டு வாசனையோ அல்லது விபூதி வாசனையோ வந்தால் குருசித்தர் நம் அருகில் வந்து செல்கிறார் என்று அர்த்தமாம். இதையும் பலர் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளனர். நீங்களும் இந்த அனுபவத்தை உணர வேண்டுமானால் வடசென்னையில் டோல்கேட் பகுதியில் ஐயப்பன் கோவில் அருகே இருக்கும் இந்த சிவாலயத்துக்கு செல்ல வேண்டும்.

    Previous Next

    نموذج الاتصال