சித்தர்கள் ஒரு இடத்தில் ஐக்கியமாக வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதை யாராலும் மாற்றவே முடியாது. அந்த இடத்தில் அவர்கள் விரும்பியபடி பரிபூரணம் அடைந்து விடுவார்கள். அதுமட்டுமல்ல அந்த தலம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் தீர்மானித்து இயங்க வைப்பார்கள்.
அத்தகைய ஜீவசமாதி அருள் ஆலயங்கள் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கில் உள்ளன. அந்த ஜீவ சமாதிகளை யார் பராமரிக்க வேண்டும் என்பதை கூட அந்த ஜீவ சமாதிகளில் அருளும் சித்தர்களே தீர்மானிக்கிறார்கள் என்று சொல்லப்படுவது உண்டு.
அது மட்டுமின்றி தனது ஜீவ சமாதி எப்போது, எப்படி, எந்த பக்தனை வரவழைக்க வேண்டும் என்ற அருளாசியையும் சித்தர்களே வழங்குவார்கள் என்றும் சொல்வார்கள். இதற்கு சென்னை ஆலந்தூரில் உள்ள ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகளின் ஜீவ சமாதியை உதாரணமாக சொல்லலாம்.
சென்னை ஆலந்தூர் ஆபிரகாம் நகரில், சவுரி தெருவில் 52-ம் எண் என்ற இடத்தில் ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகளின் அருள் ஆலயம் அமைந்துள்ளது. அங்குள்ள திறந்த வெளியில் ஜீவன் முத்தராய் குழந்தைவேல் பரதேசி சுவாமிகள் அருளாட்சி செய்து கொண்டு இருக்கிறார்.
சித்தர்கள் வாழையடி வாழை என ஒருவரை தொடர்ந்து ஒருவர் அவதாரம் எடுத்து மக்களின் குறை தீர்ப்பார்கள் என்பது சித்தர் ஆய்வாளர்களின் ஒட்டு மொத்த கருத்து ஆகும். அந்த வகையில் ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகளும் வாழையடி வாழையாக வந்தவர் என்று கருதப்படுகிறார்.
இவரது குரு வேளச்சேரியில் ஜீவ சமாதி கொண்டிருக்கும் சிதம்பரம் பெரிய சுவாமிகள் ஆவார். இதை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகளின் ஜீவ சமாதியில் ஒரு கல்வெட்டு இடம் பெற்றிருந்தது. அந்த கல்வெட்டில், “வேளச்சேரி சிதம்பரம் சுவாமிகளின் சீடர் ராயப்பேட்டை குழந்தைவேல் சாமி” என்றும் 1911-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி விரோதி கிருது மார்கழி 7, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணி என்று சுவாமிகள் பரிபூரணம் அடைந்த நாளும் நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆலந்தூர் இ.பி. ஆபீஸ் பின்புறம் வெட்ட வெளியில் இவரது ஜீவ சமாதி முதலில் அமைக்கப்பட்டு இருந்தது. சென்னை மாநகரம் விரிவடைந்த காரணத்தால் அந்த வெட்டவெளி ஆக்கிரமிப்புக்குள்ளானது. ஒரு கால கட்டத்தில் அந்த பகுதி குப்பை மேடாகவும் மாறிப்போனது.
இதன் காரணமாக ஸ்ரீ குழந்தை வேல் பரதேசி சுவாமிகளின் ஜீவசமாதியை தேடி வருபவர்கள் குறைந்து போனார்கள். என்றாலும் சுவாமிகளின் அருள் அலையால் அவர் ஐக்கியமான இடம் மட்டும் எந்தவித சேதத்தையும் சந்திக்க வில்லை. இதனால் அது நூறு ஆண்டுகளையும் கடந்து தொடர்ந்து வழிபடப்பட்டு வந்தது.
இதற்கிடையே அந்த பகுதியில் ஒரு மேல்நிலைப்பள்ளி உருவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகளின் ஜீவ சமாதிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அந்த பகுதி மக்கள் கருதினார்கள். என்றாலும் சுவாமிகள் அருள் கருணையால் அத்தகைய ஆபத்து எதுவும் ஏற்படவில்லை.
பள்ளிக்கூடம் அமைவதற்கு திட்டமிடப்பட்ட நுழைவு வாயில் பகுதியிலேயே ஜீவ சமாதி ஆலயம் ஒரு ஓரமாக இருந்தது. ஆனால் எந்த காரணத்திலோ அந்த இடத்தில் வேறு எந்த நிறுவனங்களோ, வீடுகளோ விருத்தி பெறவில்லை. அதே சமயத்தில் ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகள் தான் அங்கிருப்பதை பல்வேறு அன்பர்களின் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார்.
இதனால் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகளின் ஜீவசமாதியை சீரமைத்து பராமரிக்க முடிவு செய் தார்கள். அதன் காரணமாக தற்போது அதே இடத்தில் சிறு தகர கொட்டகை அமைத்து ஜீவ சமாதியை சற்று மேம்படுத்தி இருக்கிறார்கள்.
ஆபிரகாம் நகர் மக்கள் நல்வாழ்வு சங்க செயலாளர் சுகுமாறன் மேற்பார்வையில் சுந்தர், பாலமுருகன், சிவராமன், எஸ்.பாலாஜி, பாலாஜி மனோகர் ஆகியோர் ஒத்துழைப்புடன் தற்போது இந்த ஜீவசமாதியில் தினசரி பூஜைகள் தொய்வின்றி நடக்க தொடங்கி உள்ளன. தொடக்கத்தில் இந்த ஜீவசமாதி மீது சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது.
தற்போது ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகளின் உருவச்சிலையை பிரதிஷ்டை செய்துள்ளனர். சுவாமிகள் மேற்கு பார்த்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளார். அங்கு சென்று வழிபடுவதற்கு அனைத்து வசதிகளும் உள்ளன.
ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகளின் அருகிலேயே அவரது சீடர் ஆஞ்சநேயலு என்ற சித்தரின் ஜீவசமாதியும் இருக்கிறது. இந்த சீடரை சன்னியாசி சுபேதார் சாமி என்றும் அழைக்கிறார்கள். வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகளின் 110-ம் ஆண்டு மகாகுரு பூஜை நடக்கிறது.
மார்கழி மாதம் அஷ்டமி திதியில் ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகளின் குரு பூஜை நடத்தப்படும் என்ற மரபின் காரணமாக இந்த ஆண்டும் அதே அஷ்டமி திதியில் குரு பூஜை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினம் காலை சிறப்பு அபிஷேகங்கள் செய்ய திட்டமிட்டுள்ளனர். காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை இந்த பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு சமபந்தி அன்னதானம் நடைபெற உள்ளது. 110 ஆண்டுகளாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகளின் அருளை அன்றைய தினம் பெறுவதற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.
சென்னையில் 100 ஆண்டுகளை கடந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஜீவ சமாதிகளை விரல்விட்டு எண்ணி விடலாம். சில ஜீவ சமாதிகள் 200 ஆண்டுகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. அந்த ஜீவ சமாதிகள் எல்லாமே அழகான ஆலய அமைப்புகளுடன் கட்டப்பட்டு இருக்கின்றன.
ஆனால் ஆலந்தூரில் இருக்கும் ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகளின் ஜீவ சமாதி ஆலயம் 110 ஆண்டுகளை கடந்தும் இன்னமும் ஏனோ பெரும்பாலான சித்தர் ஆர்வலர்களால் கண்டு கொள்ளப்படாமல் இருப்பது ஆச்சரியமாகவும், வேதனையாகவும் உள்ளது.
இந்த புனித தலத்தில் ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகள் உயிருடன் மகாஜீவ சமாதி ஆகி இருப்பதாக குறிப்புகள் உள்ளன. தனது குரு சிதம்பரம் பெரிய சுவாமிகள் போன்று இவரும் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார். துரதிருஷ்டவசமாக அவையெல்லாம் குறிப்புகளாக பதிவு செய்யப் படாமலேயே போய் விட்டன.
ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகள் செய்த அற்புதங்களாக பல சம்பவங்கள், கதைகள் சொல்லப்படுகின்றன. ஆனால் செவி வழி செய்தியாக உலாவரும் அந்த கருத்துக்களுக்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமலேயே இருக்கின்றன. இவர் பற்றி வெளி மாவட்ட மக்களும் அறிந்து இருக்கிறார்கள்.
சமீப காலமாக யூடியூப் மூலம் ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகள் பற்றி தெரிந்து கொண்டு ஏராளமானவர்கள் வந்து வழிபட்டு அருள் பலனை பெற்று செல்கிறார்கள். மற்ற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்தில் இருந்து நிறைய பக்தர்கள் ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகளை தரிசனம் செய்ய வருவதாக இந்த ஜீவசமாதி ஆலயத்தை பராமரிக்கும் ஆலந்தூர் சுகுமாறன் தெரிவித்தார்.
ஆலந்தூரில் அருள்ஞான சித்தராக வாழ்ந்த ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகள் அந்த பகுதி மக்களுக்கு விடிவெள்ளியாக திகழ்ந்தார். இவரும் ஆலந்தூரில் உள்ள மற்றொரு மரபுவழி சித்தரான தாடிகார சுவாமிகளும் சமகாலத் தவர்கள் என்று கருதப்படுகிறது. இவர்கள் இருவரும் ஆலந்தூரில் தங்களது குடில்களை அமைத்துக் கொண்டு மக்களின் ஆன்மீக மேம்பாட்டுக்கு உதவி வந்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
மற்றபடி ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகள் பற்றி வேறு எந்த தகவல்களும் தெரியவில்லை. அவரது பூர்வீகம் எது? சென்னைக்கு எப்படி வந்தார்? கடந்த நூற்றாண்டில் எந்தெந்த ஆலயங்களுக்கு சென்றார்? எப்படி சித்தராக மாறினார்? மக்களுக்கு எப்படி தொண்டு செய் தார்? என்பதெல்லாம் யாருக்குமே இதுவரை தெரியவில்லை.
இவரை தெரிந்து கொள்வதற்காக சில சித்தர் ஆய்வாளர்கள் மிகப்பெரிய ஆய்வு பணியை மேற்கொண்டனர். வேளச்சேரி சிதம்பரம் பெரிய சுவாமிகளிடம் இவர் சீடராக இருந்தபோது எத்தகைய பணிகளை மேற்கொண்டார் என்று ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் அந்த ஆய்வுகளிலும் ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகள் பற்றி முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை.
என்றாலும் அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. எந்த ஒரு சித்தரையும் அவர் என்ன அற்புதங்கள் செய்து இருக்கிறார் என்பதை பார்த்து வழிபடக் கூடாது. அந்த சித்தர் நமது ஆன்மீக பலத்தை மேம்படுத்த என்ன வழிகாட்டி இருக்கிறார் என்பதில்தான் நமது கவனத்தை செலுத்த வேண்டும்.
திருமூலர் தனது திருமந்திரம் பாடலில்....
-என்று குறிப்பிட்டு இருப்பதை நாம் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகளை சிலை ரூபத்தில் பார்க்கலாம். அவர் காட்டிய வழியாக சில விஷயங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக “மவுனமாக இரு” என்பதை வலியுறுத்தி உள்ளார். அதை தெய்வ வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த இரு விஷயங்களையும் கடைபிடித்துக் கொண்டே ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகளின் திருநாமத்தை நாள்தோறும் சொல்லிக் கொண்டு இருந்தாலே நிச்சயமாக ஆத்மாவை உணர்ந்து கொண்டு முழுமையான ஞானத்தை நிச்சயமாக பெற முடியும். அப்படி ஆத்ம ஞானம் பெறுவதுதான் ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகளுக்கு நாம் செய்யும் உண்மையான தொண்டாக இருக்கும்.
ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகள் ஜீவ சமாதிக்கு சமீப காலமாக நிறைய பேர் வர தொடங்கி உள்ளனர். சிலரை அவர் கனவில் சென்று அழைத்து அருளை வெளிப்படுத்தி வருகிறார். நீங்களும் ஒருமுறை அங்கு சென்று ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகளையும், அவரது சீடர் சன்னியாசி சுபேதார் சுவாமிகளையும் தரிசனம் செய்து விட்டு வரலாம்.
நம்பிக்கையோடு சென்றால் நல்லதையே ஸ்ரீ குழந்தைவேல் பரதேசி சுவாமிகள் நமக்கு திருப்பி தருவார். கடந்த 110 ஆண்டுகளாக அவரை நம்பி வருபவர்களுக்கு அவர் வழிநடத்தும் வல்லமை சித்தராக இருக்கிறார். பிணி தீர்க்கும் பெருமானாக காட்சி அளிக்கிறார். ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு காவல் தெய்வமாக வீற்றிருக்கிறார். அவரை அணுகினால் உங்களுக்கும் அவர் காவலனாக இருப்பார்.