No results found

    ரூ.13 ஆயிரத்து 700 கோடி மோசடி: நிதி நிறுவனங்களிடம் பணத்தை இழந்த மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு- ஐ.ஜி. தகவல்


    தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட 4 நிதி நிறுவனங்கள் முதலீட்டு தொகை பெற்று பொதுமக்களிடம் ரூ.13 ஆயிரத்து 700 கோடி மோசடி செய்துள்ளதாகவும், ஏமாந்த பொதுமக்களுக்கு உரிய முதலீட்டு தொகையை மீட்டு தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் கூறினார். இதுதொடர்பாக அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் அதிக வட்டித்தொகை தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் முதலீட்டு தொகையை பெற்று 4 நிதி நிறுவனங்கள் பெரியளவில் மோசடி செய்துள்ளன. முதலீட்டு தொகைக்கு மாத வட்டியாக 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படும் என்று கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு பொதுமக்களிடம் முதலீட்டு தொகையை பெற்று ஏமாற்றி உள்ளனர்.

    சென்னை அமைந்தகரையில் செயல்பட்ட 'ஆருத்ரா கோல்டு' நிறுவனம், கீழ்ப்பாக்கத்தில் இயங்கிய 'ஹிஜாவு' நிறுவனம், கிண்டியில் செயல்பட்ட 'எல்.என்.எஸ்.-ஐ.எப்.எஸ்.' நிறுவனம், திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கிய 'எல்பின்' நிறுவனம் ஆகிய 4 நிதி நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்களை கைது செய்வதற்கு சி.பி.ஐ. போலீஸ் உதவியுடன் சர்வதேச போலீஸ் மூலமாக உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்களை பிடித்து கொடுக்க 'ரெட் கார்னர்' நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது 'லூக் அவுட்' நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. மேற்கண்ட 4 நிதி நிறுவனங்களும் தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 84 ஆயிரம் பேர்களிடம் ரூ.13 ஆயிரத்து 700 கோடி அளவுக்கு முதலீட்டு தொகை பெற்று மோசடி செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த 4 நிறுவனங்களில் 1,115 வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான கார்கள் போன்ற அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அசையா சொத்துக்களை கணக்கிட்டு வருகிறோம். மேற்கண்ட நிதி நிறுவனங்களிடம் பணத்தை இழந்த பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்கள் ஏமாந்த பணத்தை கோர்ட்டு மூலமாக பெற்று தர உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    பொருளாதார குற்றப்பிரிவு போலீசை வலுப்படுத்த 28 சப்-இன்ஸ்பெக்டர்களை கூடுதலாக பணி நியமனம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் மூலம் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்தல், மோசடி நிறுவனங்களின் சொத்துக்களை கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். இந்த 4 நிதி நிறுவனங்களில் எல்.என்.எஸ்.-ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டோம். மற்ற 3 நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Previous Next

    نموذج الاتصال