விழிப்புணர்வு பெற்ற வணிகப் பெருமக்களே, அதிக அளவாக அடுத்த ஒரு மாதத்திற்குள் உங்கள் கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் மாற்றி எழுதுங்கள். பெயர்ப்பலகைகள் தொடர்பாக 1948-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந் தேதி 575 எண் கொண்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணையின் முக்கியக் கூறுகள் வருமாறு:- எல்லா நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும். பிற மொழிகள் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆங்கில வரிகள் இரண்டாம் இடத்திலும் ஏனைய மொழிகள் அதற்கு அடுத்தும் வர வேண்டும்.
பெயர்ப் பலகைகளில் பிற மொழிகளைப் பயன்படுத்தும் போது தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகளுக்கான இடங்கள் 5 : 3 : 2 என்ற அளவில் இருக்க வேண்டும். பெயர்ப் பலகையில் உள்ள எழுத்துக்கள் சீர்திருத்த வரி வடிவில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட வரையறைக்கு உட்பட்டு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அமைக்கும்படி வணிகப் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வெளிநாடுகளில் தமிழ் வளர்த்த உங்களால் உள் நாட்டில் தமிழ் வளர்க்க கண்டிப்பாக இயலும். அவ்வாறு தமிழில் பெயர்ப் பலகை அமைக்கும் வணிகர்களுக்கு மலர்க்கொத்து கொடுத்து பாராட்டுவதற்கு நான் காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.