ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் உள்ள ராஜ்காட் அருகே காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது:- ராகுல்காந்தியின் குரலை பிரதமர் மோடி நசுக்க பார்க்கிறார். பிரதமர் மோடியும், பா.ஜனதா தலைவர்களும் எனது தாயை பல தருணங்களில் அவமானப்படுத்தி உள்ளனர். எங்கள் குடும்பத்தை அவர்கள் தொடர்ந்து அவமானப்படுத்துகிறார்கள். தியாகியின் மகனான எனது சகோதரனை துரோகி என்று சொல்கிறீர்கள். ஆனால் பாராளுமன்றத்தில் மோடியிடம் சென்று ராகுல்காந்தி கட்டி பிடித்தார். எனது சகோதரர் அவரிடம் சென்று எந்த வெறுப்பும் இல்லை என்றார். சித்தாந்தங்கள் வேறுபடலாம். ஆனால் வெறுப்பு இல்லை என்றார். ஒருவரை தொடர்ந்து இழிவுபடுத்துவதுதான் நாட்டு மரபா? ஜனநாயகம் என்றால் என்ன என்பதை எனது குடும்பம் அதன் ரத்தத்தில் கற்றுக்கொண்டது. நாங்கள் பயப்பட மாட்டோம். இவ்வாறு பிரியங்கா பேசினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போராட்டத்தில் பேசியதாவது:- இந்த சத்தியாகிரகம் இன்று மட்டும் தான். ஆனால் நாடு முழுவதும் இதுபோன்ற சத்தியாகிரக போராட்டங்கள் நடத்தப்படும். ராகுல் காந்தி சாதாரண மக்களுக்காக போராடுகிறார். பொதுமக்களின் உரிமைக்காகவும் போராடுகிறார். மோடி குடும்ப பெயர் குறித்து ராகுல்காந்தி கர்நாடகாவில் பேசினார். ஆனால் வழக்கு குஜராத்துக்கு மாற்றப்பட்டது. கர்நாடகாவில் அவதூறு வழக்கு தொடர பா.ஜனதாவுக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
ராகுல் காந்தியின் குரலை நசுக்க பார்க்கிறார் மோடி- பிரியங்கா குற்றச்சாட்டு
Tamil News