இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் அணி மூத்த தலைவர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தீவிர ஆலோசனை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு மூத்த தலைவர்களில் ஒருவரான பன்ருட்டி ராமச்சந்திரன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டங்களை நடத்த ஓ.பி.எஸ். அணி மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதன் முதல் கூட்டம் திருச்சியில் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. அதன்பிறகு கோவை, மதுரை நகரங்களில் முப்பெரும் விழாக்களை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இறுதியில் சென்னையிலும் மிகப்பெரிய முப்பெரும் விழாவை நடத்த ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களும் ஓசையின்றி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
முப்பெரும் விழா கூட்டங்களை நடத்தினால் தான் தங்களது ஆதரவாளர்களையும், நிர்வாகிகளையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று ஓ.பன்னீர் செல்வம் அணி தலைவர்கள் நினைக்கிறார்கள். எனவே ஆங்காங்கே பொதுக்கூட்டம் நடத்தவும் ஆலோசித்து வருகிறார்கள். இதுதவிர எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை எதிர்த்து தொடர்ந்து சட்டப் போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானித்திருக்கிறார்கள். சட்ட போராட்டத்துக்கு மத்தியில் ஆங்காங்கே தங்களது ஆதரவாளர்களை திரட்டி பெரிய கூட்டத்தை காட்டினால்தான் அரசியலில் நீடிக்க முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
தங்களுக்கும் அடிமட்ட அளவில் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் கூட்டத்தை திரட்ட ஓ.பி.எஸ். அணி ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள். தொடர் நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தங்கள் தொண்டர்கள், நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முகாமுக்கு தாவுவதை தடுக்கலாம் என்றும் ஓ.பி.எஸ். அணி மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள். ஓ.பி.எஸ். அணியில் உள்ள சில தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் போக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல் வந்தது. இதை தடுப்பதற்காக ஓ.பி.எஸ். அணி மூத்த தலைவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். அடுத்த கட்டமாக மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ள வழக்கில் கிடைக்கும் தீர்ப்பை பொறுத்து வேறு என்ன செய்வது என்று தீர்மானிக்க ஓ.பி.எஸ். அணியினர் முடிவு செய்துள்ளனர்.