ராகுல்காந்தி என்ன பேசினாலும், அது அவரது சொந்த கட்சிக்கே தீங்கு விளைவிக்கும். அவர் தனது கட்சியை அழித்துக் கொள்ளட்டும். அது அவர்களது உட்கட்சி பிரச்சினை. எங்களுக்கு அக்கறை இல்லை. ஆனால், இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்க முயன்றால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். அவரை மன்னிக்க மாட்டோம். நாட்டை இழிவுபடுத்த ராகுல்காந்திக்கு உரிமை இல்லை. நாட்டை இழிவுபடுத்துவது அவ்வளவு கடுமையானது இல்லை என்று காங்கிரஸ் கருதினால், பாராளுமன்றத்தில் ஒருதரப்பு மக்களின் பிரதிநிதியாக இருப்பதற்கு அக்கட்சிக்கு தகுதி இல்லை. காங்கிரசை நாடு நிராகரித்ததற்காக, நாட்டை பற்றி மோசமாக பேச காங்கிரசுக்கு உரிமை இருப்பதாக அர்த்தம் இல்லை. காங்கிரசை நாட்டு மக்கள் நிராகரித்தது எங்கள் தவறு அல்ல.
அதற்காக நாட்டையோ, ஜனநாயக ஆலயமான பாராளுமன்றத்தையோ, ஜனநாயகத்தையோ இழிவுபடுத்த காங்கிரசுக்கு உரிமை இல்லை. எனவே, ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். ராகுல்காந்தியிடம் மன்னிப்பு கோருவது எங்கள் கடமை. ஏனென்றால், சக எம்.பி.யின் செயலை கண்டிக்காமலோ, மன்னிப்பு கோராமலோ இருந்தால், மற்ற எம்.பி.க்களை மக்கள் கேள்வி கேட்பார்கள். இந்தியாவுக்கு எதிரான சக்திகளும், ஒரு கும்பலும் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்தி வருகிறார்கள். அவர்கள் ராகுல்காந்தி பயன்படுத்திய அதே வார்த்தைகளை பேசுகிறார்கள். ராகுல்காந்தி, லண்டனில் இந்தியாவை பற்றி பொய் பேசினார். முதலில், பாராளுமன்றத்தில் தன்னை பேச அனுமதிக்கவில்லை என்றார். அது முற்றிலும் சரியல்ல. அவர் ஒதுக்கப்பட்ட நேரத்தை தாண்டி பேசினார். சுதந்திரமாக பேசினார். ஆனால் அவரது பேச்சில் சாரம் இல்லை.
இரண்டாவதாக, தன்னை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேச அனுமதிக்கவில்லை என்று கூறினார். அதுவும் முற்றிலும் பொய். தனது யாத்திரையின்போது, தினந்தோறும் பலதடவை மத்திய அரசை விமர்சித்து பேசினார். நாட்டில் அதிகம் பேசியவரே அவர்தான். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும், அதன் கண்ணியத்தை ராகுல்காந்தி காயப்படுத்துகிறார். அரசியல் சட்டத்தையும், நீதித்துறையும் இழிவுபடுத்துகிறார். அவர் எத்தகையவர் என்பது இங்குள்ள இந்தியர்களுக்கு தெரியும். ஆனால், வெளிநாட்டில் இருப்பவர்கள் அவர் உண்மை பேசுவதாக நினைப்பார்கள். காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க லண்டனுக்கு சென்று தரையை சுத்தம் செய்யுமா? பிரதமர் மோடி, வெளிநாட்டில் இந்தியாவை இழிவுபடுத்தியதாக கூறுகிறார்கள். அவர் முந்தைய அரசின் செயல்களை பற்றி மட்டுமே பேசினார். மோடி, தானாக பிரதமர் ஆகிவிடவில்லை. 140 கோடி மக்களின் ஆசியுடன் பிரதமர் ஆனார். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மோடியின் பங்கை உலக நாடுகளும் அங்கீகரித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.