No results found

    ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை யார் யாருக்கு கிடைக்கும்?- அமைச்சர் கீதாஜீவன் விளக்கம்


    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த திட்டம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த திட்டம் குறித்து முதலமைச்சரின் தலைமையில் அவரது நேரடி கட்டுப்பாட்டில் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இந்த அரசாணை வெளியாகும் போது யார்-யாருக்கு, எத்தனை பேருக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என்பது தெரியவரும்.

    ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால் எவ்வளவு பேருக்கு கிடைக்கும் என்று சிலர் கணக்கு எல்லாம் போட்டு பார்க்கிறார்கள். எப்போதும் ஒரு திட்டத்தை தொடங்கும்போது தோராயமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பின்னர் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எனவே ரூ.7 ஆயிரம் கோடியை வைத்து இவ்வளவு பேருக்குதான் கிடைக்கும் என்று முடிவு செய்ய முடியாது. அரசாணை வெளியிட்ட பின்னர் ஒவ்வொருவரிடம் விண்ணப்பம் வாங்கி இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது தெளிவாக தெரியும். தேவை உள்ள இந்த ரூ.1,000 பணத்தால் பலன் பெறும் அனைத்து பெண்களும் இந்த திட்டத்தில் பயனடைவார்கள். முதியோர் உதவித்தொகை பெறும் பெண்களுக்கு இந்த பணம் கிடைக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அவர்கள் ஒரு திட்டத்தில் பயன் அடைந்து வருகிறார்கள். நான் எனக்கு இந்த உரிமைத்தொகையை கேட்க முடியுமா?. அதுபோன்று பெரிய பெண் தொழில் அதிபர்கள் கேட்க மாட்டார்கள். லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் பெண்கள் இந்த உதவித்தொகையை எதிர்பார்க்க மாட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. எனவே தகுதி உடைய பெண்களுக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال