இந்தநிலையில், காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது. இதுபோல், தமிழகம் முழுவதும் வருகிற 10-ந்தேதி ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பனிக்காலத்தில் இதுபோன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவுவது இயல்பான ஒன்று. ஆனால் கோடைக்காலம் தொடங்கிய பின்னரும், காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் பிரிவு துறை தலைவர் டாக்டர் பாலசங்கர் கூறுகையில், தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் சளி மற்றும் காற்றின் மூலம் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த காய்ச்சல் குழந்தைகளை குறிவைத்து தாக்குகிறது..
குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அவர்களை உடனடியாக பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும். அப்போது தான் ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் பரவுவதை தடுத்து நிறுத்த முடியும். குழந்தைக்கு அதிக காய்ச்சல் இருக்கும்போது மூச்சுவிட சிரமமாக இருக்கிறது, இருமல் அதிகமாக இருக்கிறது என்றால் மருத்துவரை சந்திப்பது தான் சிறந்தது. வெயில் காலம் அதிகரிக்க தொடங்கிவிட்டால், காய்ச்சல் பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும். வரும் நாட்களில் காய்ச்சல் குறைந்துவிடும். இந்த காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை. மதுரையில் காய்ச்சல் பாதிப்பை காட்டிலும் மஞ்சள் காமாலை பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மஞ்சள் காமாலை நோய் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வந்து உள்நோயாளிகளாகவும் அனுமதிக்கப்படுகின்றனர். தண்ணீரை கொதிக்கவைத்து, ஆற வைத்து குடிக்க வேண்டும். தண்ணீரின் மூலமே டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை பாதிப்பு வருகிறது. எனவே, சுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டும் என்றார்.