No results found

    தமிழ்நாட்டில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது- கவர்னர் ஆர்.என்.ரவி


    சென்னை அம்பத்தூரில் உள்ள அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. கல்லூரி நிறுவனத் தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமை தாங்கினார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி புதிதாக கட்டியுள்ள வெள்ளி விழா கட்டிடத்தை திறந்து வைத்து வெள்ளி விழா மலரை வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது: இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ந்து வருகிறது. இன்றைய உலகில் இந்தியாவின் பேரும் புகழும் உயர்ந்து நிற்கிறது. பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் நம் நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியின் 50-வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் போது இந்தியா 100 ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும். மிக்க மகிழ்ச்சியான தருணமாக அது அமையும். இன்று பட்டம் பெறும் பட்டதாரிகள் அனைவருக்கும் நிறைய பொறுப்புகள் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். இன்றைய கால கட்டத்தில் தொழில்நுட்பம் நன்றாக வளர்ந்து இருக்கிறது. அதனை தவறாக பயன்படுத்தாமல், ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் செயல்பாடுகளும், நிலைப்பாடுகளும் உயர்ந்திருப்பதால் பிற நாடுகள் இந்தியாவை உற்று நோக்குகின்றன.

    மாணவர்கள் ஆக்கப் பூர்வமான அறிவோடும் திறமையோடும் செயல்பட வேண்டும். பட்டம் பெற்ற உங்களது சிந்தனைகள் சிறப்பாகவும் உயர்ந்ததாகவும் இருக்க வேண்டும். ஆலமரத்தின் விதைகள் போல இருந்து எதிர்கால இந்தியாவை மாணவர்கள் ஒரு விருட்சமாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி, கல்லூரி செயலாளர் என்.ஆர்.டி.பிரேம்குமார், இணைச் செயலாளர் பிரேம்சந்த், கல்லூரி முதல்வர் இனிதா லீபனோன் எபன்சி, துணை முதல்வர் ஜாபியா சாலமோன், பன்னாட்டு அரிமா இயக்குனர் ஆர்.சம்பத், ஜெ.பிரவீன்குமார் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال