கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் ஏகோபித்த அன்பை பெற்ற எடப்பாடி பழனிசாமி இரவு வரை வீட்டுக்கு வந்த அனைவரையும் சந்தித்தார். எந்த கெடுபிடியும் இன்றி அவரது வீட்டுக்கு வந்த அனைவரையும் பாதுகாவலர்கள் உள்ளே அனுமதித்தனர். இதனால் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எடப்பாடியை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என வீட்டுக்கு வந்த அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி காணப்பட்டது. அடையார் வீட்டில் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலையில் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பேசுகையில், ' அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகளை மீண்டும் நம் பக்கம் வரவழைக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்கள். அடுத்தக்கட்ட பணி அதுவாகத்தான் இருக்க வேண்டும்.
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வர உள்ளதால் அ.தி.மு.க.வை மீண்டும் வலுவான இயக்கமாக மாற்ற இப்போதே ஒன்று சேர வேண்டும். உங்களுக்கே தெரியும். குறிப்பிட்ட ஒரு சிலரை தவிர மற்றவர்களை மீண்டும் நம் பக்கம் கொண்டுவந்து விடுங்கள். தி.மு.க. மிரளும் அளவுக்கு நமது கட்சிப் பணி இருக்க வேண்டும். நாம் நினைத்தால் எதுவும் முடியும். தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். என்ன பிரச்சினை இருந்தாலும் என்னிடம் வந்து தெரிவியுங்கள். உங்களுக்கு உதவ நான் தயாராக உள்ளேன். இந்த இயக்கத்துக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் உங்கள் செயல்பாடுகள் அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளருக்கான அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த தொடங்கிவிட்டார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.