அதேநேரம் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உருவானது. 2009 பாராளுமன்ற தேர்தலிலும் அனைத்து தொகுதியிலும் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. ஆனால் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அரசியல் களத்தை உணர்ந்த விஜயகாந்த் 2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். அந்த தேர்தலில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். ஆனால் அ.தி.மு.க.வுடன் அமைக்கப்பட்ட கூட்டணி நீடிக்கவில்லை. அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வென்றது.
அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தலைமையில் மக்கள் நல கூட்டணி உருவானது. விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். ஆனாலும் அந்த கூட்டணி மக்கள் மத்தியில் எடுபடவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார்கள். அதுவும் கைகொடுக்கவில்லை. இதற்கிடையில் விஜயகாந்தின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. சரியாக பேச முடியவில்லை. எழுந்து நிற்கவும் சிரமப்பட்டார். வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் எதிர்பார்த்த பலன் இல்லாமல் போனது. அதைதொடர்ந்து கட்சியில் பொருளாளராக இருக்கும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சியை வழிநடத்தினார். அவரது மகன் விஜயபிரபாகரனும் கட்சி பணியில் இறங்கினார்.
நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு மிக மோசமான தோல்வியை தழுவியது. சுமார் ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றது. விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்த வரை கட்சியும் ஆரோக்கியத்துடன் காணப்பட்டது. மீண்டும் கட்சியை வலிமைப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள். பிரேமலதாவை கட்சியின் செயல் தலைவராகவும், விஜயபிரபாகரனுக்கு இளைஞர் அணியில் முக்கிய பொறுப்பு வழங்கியும் கட்சியை முன்னெடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்துகிறார்கள். விரைவில் கூட்டப்பட இருக்கும் பொதுக்குழுவில் இதற்கான முடிவுகள் மேற்கொள்ளப்படும். தே.மு.தி.க. பா.ஜனதா கூட்டணியில் இருந்து இதுவரை வெளியேறவில்லை. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியா? தி.மு.க. கூட்டணியா? என்று யோசித்து வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.