இதற்கிடையே கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்பட 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 32 மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 10 சதவீதத்தை தாண்டியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த 32 மாவட்டங்களிலும் தினசரி பாதிப்பு விகிதம் கடந்த 2 வாரங்களில் மட்டும் மூன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் என்பது அன்றையதினம் செய்யப்பட்ட மொத்த மாதிரிகளில் பரிசோதனையில் தொற்று எத்தனை பேருக்கு உறுதியாகிறது என்பதை குறிப்பிடும். அந்த வகையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 5 மாநிலங்களில் உள்ள 9 மாவட்டங்களில் மட்டும் தினசரி பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.
ஆனால் தற்போது 14 மாநிலங்களில் உள்ள 32 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரள மாநிலம் வயநாட்டில் 14.8 சதவீதம் ஆகவும், கோட்டயத்தில் 10.5 சதவீதமாகவும் உள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள சாங்லி மாவட்டத்தில் 14.6 சதவீதமாகவும், புனேயில் 11.1 சதவீதமாகவும், குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் 10.7 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. தெற்கு டெல்லியில் 13.8 சதவீதமாகவும், கிழக்கு டெல்லியில் 13.1 சதவீதம், வடகிழக்கு டெல்லியில் 12.3 சதவீதமாகவும், மத்திய டெல்லியில் 10.4 சதவீதமாகவும் உயர்ந்திருப்பது தினசரி பாதிப்பு புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3-ம் அலையின் போது ஏற்பட்ட தொற்று அறிகுறிகளே தற்போது தொற்றால் பாதிக்கப்படும் பெரும்பாலனோருக்கு ஏற்படுவது தெரியவந்துள்ளது. அதே நேரம் தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு பாதிப்பு பெரிய அளவில் இல்லை. இதனால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுபவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்து வந்தாலும் கூட அவர்களுக்கு பாதிப்பின் தீவிரம் அதிகமாக இல்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேசிய கொரோனா தடுப்பு பிரிவு நிர்வாகி டாக்டர் ராஜூஜெயதேவன் கூறுகையில், தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இல்லை. அதே நேரம் பாதிப்பை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்.