நாட்டில் எத்தனையோ கட்சிகள் உள்ளன. வரலாற்றில் இடம்பெற்ற கட்சிகளும் உண்டு. திடீர், திடீரென தோன்றும் கட்சிகளும் உண்டு. அப்படி தோன்றும் கட்சிகள் நாங்கள் தான் அடுத்த அடுத்த ஆட்சி. நான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்கிறார்கள். அப்படி சொல்லிய கட்சிகள் எல்லாம் இன்றைக்கு எந்த நிலைமைக்கு சென்றிருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். அவர்கள் எல்லாம் அநாதையாக அலைந்து கொண்டிருப்பதை நாம் இங்கு காண்கிறோம். அண்ணா, கலைஞர் ஆகியோர் ஆட்சி அமைத்து எண்ணற்ற திட்டங்களை தமிழக மக்களுக்கு செயல்படுத்தி உள்ளனர். 75-ல் இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க இந்திராகாந்தி இந்தியாவில் நெருக்கடி நிலையை உருவாக்கினார். அப்போது நாம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தோம்.
அப்போது இந்திராகாந்தியிடம் இருந்து தூது வந்தது. நெருக்கடி நிலையை நீங்கள் எதிர்க்க கூடாது. அப்படி எதிர்த்தால் உங்கள் ஆட்சியை கலைத்துவிடுவோம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கலைஞர் எனக்கு ஆட்சி முக்கியமில்லை. எனக்கு ஜனநாயகம் தான் முக்கியம் என சொல்லி, மறுநாள் கடற்கரையில் கூட்டத்தை கூட்டி நெருக்கடி நிலையை உடனே ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு அடுத்த நாள் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு, முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அப்போதே ஆட்சியை பற்றி கவலைப்படாமல் மக்களையும் நாட்டையும் பற்றி கவலைப்பட்டவர் தான் கலைஞர். அதனை தொடர்ந்து 1991-ல் விடுதலை புலிகளுடன் தி.மு.க.வுக்கு உறவு என அபாண்ட பொய்யை கூறி ஆட்சியை கலைத்தனர்.
அதன்பின்னரும் நாம் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளோம். தற்போது 6-வது முறையாக என்னுடைய தலைமையில் தி.மு.க ஆட்சி நடக்கிறது. நாட்டில் நம்மை போல் வெற்றி பெற்ற கட்சியும் கிடையாது. தோற்ற கட்சியும் கிடையாது. வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல் மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி தி.மு.க தான். எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு தந்த மக்களுக்கு நாங்கள் தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகள் தந்தோம். அந்த வாக்குறுதிகள் அனைத்தும் தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தி.மு.க ஆட்சி என்பது சொன்னதை மட்டுமல்ல, சொல்லாதையும் செய்யக்கூடிய கட்சி தான் இந்த தி.மு.க கட்சி.
இதன் காரணமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றோம். இதற்கு எல்லாம் இந்த ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையே காரணம். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இதுபோன்ற ஒரு பெரிய வெற்றியை பெற வேண்டும். திட்டங்கள் தொடர, சாதனைகள் தொடர, பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை பெற தொண்டர்கள் இன்றைக்கே களம் இறங்க வேண்டும். அதற்குரிய வியூகத்தையும் அமைக்க வேண்டும். ஏனென்றால் இன்றைக்கு மதம், சாதியை பயன்படுத்தி கலவரம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தி இந்த ஆட்சியை கலைத்துவிடலாம் என கனவு காண்கின்றனர். அதற்கு நாம் செவி சாய்க்காமல் பாராளுமன்ற தேர்தல் பணியை தொடங்க வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே, நாளையும் நமதே என்ற உறுதியுடன் பணிகளை தொடங்குங்கள். சென்ற முறை 39-ல் வெற்றி பெற்றோம். இந்த முறை மொத்தமாக 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற நாம் முயற்சியில் ஈடுபட போகிறோம். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். விழாவுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் ஏற்பாட்டில் இணைப்பு விழா நடந்தது. அவர், மு.க.ஸ்டாலினுக்கு வீரவாள் நினைவுப்பரிசு வழங்கினார். அமைச்சர்கள் முத்துசாமி, காந்தி, வெள்ளக்கோவில் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விமான நிலையத்தில் இருந்து சின்னியம்பாளையம் செல்லும் வழியில் இருபுறமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரிசையாக நின்று மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்கிய தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள், கைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். கோவையில் 2 விழாக்களை முடித்து கொண்டு, கார் மூலம் இரவு கோவை விமான நிலையம் வருகிறார். இரவு 9 மணிக்கு அவர் சென்னை புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா நடக்கும் பகுதி, பாராட்டு விழா நடைபெறும் இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் முதலமைச்சரின் வருகையையொட்டி இன்று ஒரு நாள் கோவையில் டிரோன்கள் பறக்கவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.