அப்போது மா.சுப்பிரமணியன் ஆட்சேபகரமான ஒரு வார்த்தையை தெரிவித்ததற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் அரசு சார்பில் காலை உணவு திட்டத்துக்கு நிதி ஒதுக்கி அதை செயல்படுத்தினார்" என்று கூறினார். இதைத்தொடர்ந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, "2018-19-ம் ஆண்டு கவர்னருக்கு ரூ.50 லட்சம் ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க. அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
2019-20-ம் ஆண்டில் ரூ.50 லட்சத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி கவர்னருக்கு வழங்கி இருக்கிறார்கள். அந்த பணத்தில் இருந்துதான் தன்னார்வ தொண்டு நிறுவனமான அட்சய நிறுவனத்துக்கு காலை உணவு வழங்கியதற்காக பணம் கொடுத்து இருக்கிறார்கள். அதுவும் முதல் ஆண்டில் ஒதுக்கிய ரூ.5 கோடியில் ரூ.4 கோடிதான் செலவழித்து இருக்கிறார்கள். ரூ.1 கோடி பணம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அதற்கு அடுத்த ஆண்டு கவர்னர் ரூ.1 கோடி தான் உணவு வழங்க செலவழித்துள்ளார்.மீதி ரூ.4 கோடி என்ன ஆனது என்று தெரியவில்லை. அதற்கான கணக்கும் இதுவரை இல்லை", என்றார். இதற்கு மீண்டும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "இது ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டம். நீங்கள் செய்தால் சரி. நாங்கள் செய்தால் தவறா?" என்று விளக்கம் கொடுத்தார். இதனால் காரசார விவாதம் நடந்தது. அப்போது அமைச்சர் துரைமுருகன் எழுந்து,"கவர்னருக்கு ஒதுக்கப்பட்ட ரூ.5 கோடி பணம் பற்றி கவர்னர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்" என்றார்.