நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே நடிகை சமந்தாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சமந்தா சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சமந்தா அளித்துள்ள நேர்காணல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, "எனக்கு மயோசிடிஸ் நோய் இன்னும் முழுமையாக குணமாகவில்லை. தொடர்ந்து அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறேன். ஆனாலும் முன்பு இருந்த பாதிப்பில் இருந்து தேறி இருக்கிறேன். இந்த நோய் பாதிப்பில் இருந்து விரைவில் முழுமையாக மீண்டு வருவேன்" என்றார்.