No results found

    10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நொறுக்கு தீனி வழங்க திட்டம்- மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு


    சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும், செய்முறை வகுப்புகளை சிறப்பான முறையில் நடத்திட ஆய்வகங்களின் கட்டமைப்புகள் படிப்படியாக மேம்படுத்தப்படும். முதல் கட்டமாக வருகிற கல்வி ஆண்டில் ரூ.2 கோடி செலவில் 10 மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும். சென்னை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் முக்கிய அறிவிப்புகளை அறிவிக்கவும், அனைத்து பகுதிகளையும் உடனடியாக தொடர்பு கொள்வதற்கு வசதியாக அனைத்து பள்ளிகளிலும் 'பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம்' அமைத்து தரப்படும்.

    மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஆலோசனை வழங்க அனைத்து மண்டலங்களிலும் ரூ.30 லட்சம் செலவில் ஆலோசகர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். பழுதடைந்த பள்ளிக்கட்டிடங்களை மறுசீரமைக்க ரூ.25 கோடி ஒதுக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளியுடன் இணைந்த 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் உள்ள 20 பள்ளிகளுக்கு ஸ்ருதி பெட்டி, ஆர்மோனியம், தாளம் உள்ளிட்ட இசைக் கருவிகள் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் தானியங்கி மணி ரூ.27.17 லட்சம் செலவில் அமைக்கப்படும். தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் ஜனவரி மாதம் முதல் பொதுத்தேர்வு முடியும் ஏப்ரல் மாதம் வரை அவித்த சுண்டல், பயிறு வகைகள் ரூ.1 கோடி செலவில் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

    Previous Next

    نموذج الاتصال