No results found

    Google Tamil News | நளினி இன்று விடுதலையாக வாய்ப்பு இல்லை- சிறை கண்காணிப்பாளர் தகவல்


    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 1998ம் ஆண்டு 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில், படிப்படியாக 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் தூக்கு தண்டனை கைதிகளாக இருந்தனர். அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது.

    32 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த பேரறிவாளன் கடந்த மே 18ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து நளினி உள்பட மற்றவர்களும் தங்களை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுதொடர்பாக நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு முன்பு நேற்று விசாரணை நடந்து வந்தது. இதன் முடிவில், நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்தினம் ஆகியோர் அதிரடியாக உத்தரவிட்டனர். இந்நிலையில், பரோலில் உள்ள நளினி விடுதலை தொடர்பான உத்தரவு நகல் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் இன்று விடுதலையாக வாய்ப்பு இல்லை என்று வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தகவல் தெரிவித்துள்ளார். இதனால், நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் திங்கட்கிழமை விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    Previous Next

    نموذج الاتصال