சர்வதேச ஒலிம்பியாட் போட்டி எப்படி அறிவுசார்ந்த போட்டியாக இருந்ததோ, அதனைத்தொடர்ந்து தற்போது சர்வதேச புத்தக கண்காட்சி அறிவுசார்ந்த வாசிப்பை ஊக்கப்படுத்தும் நிகழ்வாக நடக்க இருக்கிறது. சிறந்த தமிழ் இலக்கியங்கள், தமிழ் படைப்புகள் உலகளவில் கொண்டு செல்லும் பணியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 20 நாடுகளில்... 50 நாடுகளில் உள்ள பதிப்பாளர்கள், எழுத்தாளர்களுக்கு இதில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம். குறுகிய காலமாக இருப்பதால், 20 நாடுகளில் இருந்தாவது பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் வருவார்கள் என்று நம்புகிறோம். முதல் முறையாக நடத்த இருக்கிறோம். இனி வரும் ஆண்டுகளில் அதிக நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் வருவார்கள் என்றார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. அந்தவகையில் மழைக்காலத்தையொட்டி விடுமுறை விடப்படும் நாட்களை எவ்வாறு ஈடுசெய்ய போகிறீர்கள்? அதற்கு எதுவும் திட்டம் இருக்கிறதா? என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், பாடத்திட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே மழைக்காலத்தில் விடப்படும் விடுமுறை நாட்களை ஈடுசெய்ய தேவைப்படும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு, பாடத்திட்டங்களை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.