No results found

    மின் கட்டணம், பால் விலை உயர்வுதான் திராவிட மாடலா?- ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு கேள்வி | Google Tamil News


    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்தும், உடனடியாக வாபஸ் பெற அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பா.ஜனதா ஆர்ப்பாட்டம் நடத்தியது. மொத்தம் 1100 இடங்களில் நடந்தது. ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். சென்னையில் 66 இடங்களில் நடைபெற்றது. இதில் அடையாறு தொலைத்தொடர்பு அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல் தலைவர் சத்யராஜா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் முன்னிலை வகித்தார். தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விலைவாசியை உயர்த்தமாட்டோம் என்றார்கள். ஆனால் இப்போது என்ன நடக்கிறது. மின் கட்டணம் உயர்வு ஷாக் அடிக்கிறது. பால் விலை உயர்வு வயிறு எரிகிறது. சொத்து வரி உயர்வு அதிர்ச்சியளிக்கிறது. இதுதான் திராவிட மாடலா? முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் எழுதி கொடுப்பதைத்தான் படிப்பது வழக்கம். மழைக்காலத்துக்கு முன்பே முன்னேற்பாடுகள் செய்யாததால் சாலைகள் அனைத்தும் மிகப்பெரிய பள்ளங்களாக மாறி உள்ளன. பொதுமக்கள் உயிரை கையில் பிடித்தபடி பயணிக்கிறார்கள். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. என்னை மிக மோசமாக பேசினார்கள். அது பற்றி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்துள்ளேன். இது சம்பந்தமாக முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும் என்றேன். ஆனால் இதுவரை கருத்து சொல்லவில்லை.

    இதே நிலை தி.மு.க.வை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்டு இருந்தால் சும்மா இருப்பார்களா? வீட்டில் கல் எறிவார்கள். வெளியே நடமாட விடாமல் போராட்டம் நடத்துவார்கள். இந்தி எதிர்ப்பு என்கிறார்கள். ஆனால் தி.மு.க.வினர் நடத்தும் 45 பள்ளிகளில் இந்தி கற்று தருகிறார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மதுவுக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இப்போது ரூ.720 கோடிக்கு மது விற்றதாக கொண்டாடுகிறார்கள். தமிழ் தமிழ் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். பிரதமர் மோடி உலகம் முழுவதும் தமிழின் பெருமையை எடுத்து சொல்கிறார். இந்த போராட்டம் இத்துடன் முடிந்து போகாது தொடரும். அண்ணாமலை தலைமையில் தாமரை மலரும். இவ்வாறு அவர் பேசினார். திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகர் பஸ் நிறுத்தம் அருகில் வடசென்னை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயகணேஷ், திருவொற்றியூர் மேற்கு மண்டல் தலைவர் பாலு ஆ‌கியோ‌ர் தலைமை‌யி‌ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கலந்துகொண்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தண்டையார்பேட்டையில் மண்டலத் தலைவர் வீரா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொருக்குப்பேட்டை காரனேசன் நகரில் மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல தலைவர் போஸ்கோ மாணிக்கம், சக்திவேல், அருள் முருகன், சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் சுந்தர ராஜ், கோவிந்த ராஜ், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புறநகர் பகுதிகளான தாம்பரம், பம்மல், பெருங்க ளத்தூர், சிட்லபாக்கம், ஊரப்பாக்கம் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெருங்களத்தூர் பகுதியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொற்றாமரை சங்கரன் மண்டல தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் பால் பாக்கெட்டை கீழே கொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் பழனி வேல் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிட்லபாக்கத்தில் மாவட்ட செயலாளர் வேதசுப்ரமணியம் தலைமையிலும் பம்மலில் வழக்கறிஞர் அலேக்ஸ் சுதாகர் தலைமையிலும் தாம்பரம் பேருந்து நிலையத்தில் மண்டல தலைவர் கணேஷ் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரப்பாக்கத்தில் மாவட்ட தலைவர் டி.ஜி.மோகனராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் விளையாட்டு பிரிவு மாநில துணை தலைவர் பாலாஜி தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال