No results found

    Google Tamil News | மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம் வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதிகளை எடப்பாடி பழனிசாமி நேரில் பார்த்தார்


    சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்தது. சென்னை புறநகர் பகுதிகளான மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேல் தளங்களில் குடியிருந்தவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, பெஞ்சமின், சோமசுந்தரம், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் உள்பட பலர் உடன் சென்றனர்.

    முதலில் மணப்பாக்கம் திருவள்ளுவர் நகரில் தொடங்கினார். மெயின் ரோட்டில் இறங்கி தெருக்களுக்குள் சென்றபோது முட்டளவு தண்ணீர் தேங்கி நின்றது. அதில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடந்து சென்று பொதுமக்களின் சிரமங்களை நேரில் பார்த்தார். அப்போது மின்சாரம் உள்ளதா? அரசு உதவிகள் கிடைத்ததா? வேறு ஏதேனும் உதவிகள் வேண்டுமா? என்று கேட்டார். அப்போது, பொதுமக்கள் 3 நாட்களாகியும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளத்தை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவில்லை. வீடுகளில் தங்க முடியாமல் உறவினர் வீடுகளுக்கும், சிலர் லாட்ஜூகளிலும் தங்கி இருக்கிறார்கள்.

    எல்லா ஊர்களில் இருந்தும் தண்ணீர் இந்த பகுதிக்குத்தான் வருகிறது. முதலில் தண்ணீரை வடிய செய்ய வேண்டும். அதன்பிறகு தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர். அதை தொடர்ந்து காவியா நகர், பெல்நகர் பகுதிகளை பார்த்துவிட்டு மதனந்தபுரம், சிந்து காலனி, கொளப்பாக்கம் கணேஷ் நகர், ராமமூர்த்தி அவென்யூ உள்ளிட்ட பகுதிகளையும் பார்த்தார். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு நிவாரண உதவிகளுக்கு மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஏற்பாடு செய்திருந்தார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 25 கிலோ அரிசி மூட்டை, காய் கறிகள், பால், ரொட்டி ஆகிய நிவாரண பொருட்களை 500 குடும்பங்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    Previous Next

    نموذج الاتصال