தமிழகம் வந்த பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோரின் பயணம் குறித்து மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது: அமித்ஷா தலைமையில் நடைபெற்ற மாநில பாஜக ஆலோசனை கூட்டத்தில் முழுக்க முழுக்க கட்சியின் வளர்ச்சி குறித்து பேசப்பட்டது. தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்? இன்னும் என்ன செய்ய வேண்டும்? நான் பிரதமரிடம் ஏதாவது கொண்டு செல்ல வேண்டுமா? என்று அவர் கேட்டறிந்தார். மாநில தலைவர் என்ற முறையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியுடன் காரில் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது, அவரும் தமிழக மக்களுக்கு நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம். இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டறிந்தார். தமிழக மக்கள் மீது பா.ஜ.க. தலைவர்கள் மிகுந்த பாசமும், நம்பிக்கையும் வைத்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் கருத்துகளுக்காக பா.ஜ.க.வினர் மீது எப்படிப்பட்ட பொய் வழக்குகளை பதிவு செய்கின்றனர் என்று எங்கள் கட்சியின் சமூக வலைத்தள பிரிவு தலைவர் நிர்மல்குமார் மற்றும் மாநில துணை தலைவர் பால்கனகராஜ் ஆகியோர் ஒரு பட்டியலை அமித்ஷாவிடம் அளித்தனர். இதனை கவனித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று அமித்ஷா உறுதி அளித்தார். கோவை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்தும் பா.ஜ.க. மூத்த நிர்வாகிகளிடம் அமித்ஷா கேட்டறிந்தார். இவ்வாறு அவர் கூறினார்.
action
amit shah
annamalai
bjp members
cases
false
Google Tamil News
interview
promised
registration