No results found

    Google Tamil News | ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுதலையான 4 பேர், திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைப்பு


    திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் உள்ளது. தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, போலி பாஸ்போர்ட் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்கள் உள்பட நைஜீரியா, பல்கேரியா, வங்காளதேசம், இந்தோனேசியா உள்பட 130 வெளிநாட்டினர் இந்த முகாமில் தங்கி உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்படும் வரை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.

    இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் சென்னை புழல் சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர். எனினும் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு நேற்று நள்ளிரவு அழைத்து வரப்பட்டனர். அவர்களின் வருகையை சிறப்பு முகாமின் பொறுப்பு அதிகாரி சப்-கலெக்டர் வேலுமணி முறைப்படி பதிவு செய்தார். பின்னர் அவர்கள் அங்குள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். முன்னதாக இவர்கள் 4 பேரும் இங்கு அழைத்து வரப்பட்டதையொட்டி, திருச்சி மத்திய சிறை வளாகத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நான்கு பேரும் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் வெளிநாட்டினர் என்பதால் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறையின் கியூ பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார். அவர்கள் சொந்த நாட்டுக்கு செல்வதும், வெளிநாட்டினர் என பதிவு செய்து இந்தியாவில் தங்கி இருப்பதும், இலங்கை தமிழர் நலவாழ்வு முகாமுக்கு செல்வதும் அவர்களின் விருப்பம் என்றும், மத்திய உள்துறை அனுமதி கிடைத்ததும் விரைவில் அவர்கள் இங்கிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال