இதற்கிடையில் சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியிலும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸ்.சும் வரிந்து கட்டுகிறார்கள். கட்சி தேர்தலை நடத்தி இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார். ஆனால் அதற்கு ஓ.பி.எஸ். முட்டுக்கட்டை போட்டதால் பொதுச்செயலாளர் பொறுப்பும் தள்ளிப் போகிறது. ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ஆகிய இருவரும் சட்ட ரீதியான அணுகுமுறைகளை கையாண்டு வரும் நிலையில் தங்களது செல்வாக்கை மேலும் நிலை நிறுத்தி கொள்ள முயற்சி செய்கின்றனர். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஓ.பி.எஸ். ஈடுபட்டு வருகிறார். அதற்கான காய்களை அவர் நகர்த்தி வருகிறார்.
அ.தி.மு.க. தொண்டர்கள் தன்பக்கம் இருப்பதாக ஓ.பி.எஸ். கூறி வரும் நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிய திட்டத்தை எடப்பாடி பழனிசாமி வகுத்துள்ளார். எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற எடப்பாடி பழனிசாமி தொண்டர்களும் தன்பக்கம் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க பிரமாண்டமான அளவில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார். அந்த மாநாட்டை எங்கு நடத்தினால் நல்லது, கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் மாநாடு அமைய வேண்டும். அதற்கு தகுந்த இடம் தலைநகரம் சென்னை தான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளார்.
சென்னை அருகே விசாலமான இடத்தில் மாநாட்டை நடத்தி தொண்டர்கள் அனைவரையும் தன் பக்கம் இழுக்க அவர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க.வில் இதுவரையில் நடைபெறாத வகையில் மாநாடு இடம்பெற வேண்டும். தமிழகம் மட்டுமின்றி பிற மாநில அ.தி.மு.க. தொண்டர்களையும் கொண்டு வந்து சேர்க்கவும் அதன்மூலம் ஒட்டுமொத்த தொண்டர்களும் தன்பக்கம் இருக்கிறார்கள் என்பதை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு மட்டுமின்றி பிற கட்சியினருக்கும் எடுத்துரைக்கும் வகையில் மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என முக்கிய நிர்வாகிகளுடன் அவர் ஆலோசித்து வருகிறார். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் டிசம்பர் இறுதிக்குள் மாநாடு நடத்தி முடிக்கப்பட வேண்டும். 2023 புதிய ஆண்டில் இருந்து உத்வேகத்துடன் கட்சியை வழி நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி கையாளப் போகிறார். பிரிந்து கிடக்கும் தொண்டர்களை ஒரே தலைமையின் கீழ் கொண்டு வருவதற்கு இந்த மாநாடு முத்தாய்பாக அமையும் என்று அவர் எதிர்பார்க்கிறார். இதுகுறித்து அ.தி.மு.க. முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், தொண்டர்கள் இதுவரையில் எதிர்பாராத வகையில் இந்த மாநாடு சிறப்பாக அமையும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இப்போதே தொடங்கிவிட்டன. எடப்பாடி பழனிசாமியின் கரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இம்மாநாடு அமையும் என்றார்.