No results found

    தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க கேரளா புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்கள் அடங்கிய தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. தென்மண்டல கூட்டத்தில் மாநிலங்கள் இடையேயான எல்லையோர பிரச்சினை, சட்டம்-ஒழுங்கு விவகாரம், உள்கட்டமைப்பு, மகளிர் பிரச்சினைகள், அணை நீர் பங்கீடு குறித்து விவாதிக்கப்படும். இதன் 30-வது கூட்டம் நாளை கேரளாவில் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கேரளா புறப்பட்டார். திருவனந்தபுரத்தில் தங்கும் அவர் இன்று மாலை கேரள முதல்- மந்திரி பினராய் விஜயனை சந்தித்து பேசுகிறார். அப்போது கேரளாவுக்கும், தமிழகத்திற்கும் இடையேயான அணை நீர் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்.

    குறிப்பாக, முல்லை பெரியாறு அணை, நெய்யாறு, சிறுவாணி அணை பிரச்சினைகள் குறித்தும் இருவரும் பேசுகிறார்கள். இந்த பிரச்சினைகள் குறித்து ஏற்கனவே அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இருவரும் பேச உள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் தற்போது ஓணப்பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கேரள அரசு சார்பில் இன்று மாலை கலை, இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் இன்று இரவு திருவனந்தபுரத்தில் தங்குகிறார். நாளை காலை 10 மணிக்கு தென்மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்குகிறது. இக்கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார். அப்போது தமிழகத்தின் கருத்துக்களை தெரிவிக்கிறார். இக்கூட்டம் முடிந்த பின்னர் அவர் நாளை இரவு 7 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

    Previous Next

    نموذج الاتصال