புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறி யிருப்பதாவது:- வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'ஐ.என்.எஸ் விக்ராந்த்' பிரம்மாண்டமான போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்த கப்பலில் இருந்து 31 போர் விமானங்களை இயக்க முடியும். மேலும் இந்தியக் கடற்படைக்கு புதிய கொடி அறிமுகம் செய்துள்ள பிரதமருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். முழுமையாக நம் நாட்டிலேயே உள்ள மூலப்பொருள்களை கொண்டு பிரமாண்டமான போர்க்கப்பலை உருவாக்கி வரலாற்று சாதனை புரிந்த இந்திய கடற்படை தொழில்நுட்ப விஞ்ஞானிகளுக்கும், இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், 'வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம், அடி மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்'என்று பாடிய மகாகவி பாரதியின் கனவும், கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் கனவும் நனவாகியுள்ளது. தற்சார்பு இந்தியா மூலம் பாரத மண்ணுக்கு பெருமை சேர்க்கும் பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் புதுவை கவர்னர் தமிழிசை வாழ்த்து
Tamil News