ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் மாநில காவல்துறையினர், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் உள்ளிட்டோர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய சோதனையின் போது கோரிபுராவில் இருந்து போமை பகுதி நோக்கி வந்த மூன்று சந்தேகத்திற்குரிய நபர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர், இருப்பினும், பாதுகாப்புப் படையினர் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையின் போது அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாரிக் அஷ்ரப், சக்லைன் முஷ்டாக் மற்றும் தவ்பீக் ஹசன் ஷேக் என அடையாளம் காணப்பட்டனர். மேலும் நடத்தப்பட்ட சோதனையில், பயங்கரவாதிகள் வைத்திருந்த பாகிஸ்தான் கொடிகள், மூன்று கை எறிக்குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பை அந்த பயங்கரவாதிகள் தேடி வந்தது முதல்கட்ட விசாரணை முடிவில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டு, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கொடியுடன் சுற்றி திரிந்த மூன்று பயங்கரவாதிகள் கைது- பாதுகாப்பு படையினர் நடவடிக்கை
Tamil News