அதிகாரம் 1
1 பாரசீக அரசனான சீருசின் முதல் ஆண்டில் எரெமியாசு வழியாக ஆண்டவர் சொல்லியிருந்தது
நிறைவேறும்படி, பாரசீக அரசன் சீருசின் மனத்தை ஆண்டவர் தூண்டிவிட்டார். அதனால், அவன்
தன் நாடெங்கும் ஓர் ஆணை பிறப்பித்து அதை எழுத்து மூலமும் வெளியிட்டான்.
2 பாரசீக அரசனான சீருஸ் சொல்லுவதாவது: விண்ணகக் கடவுளான ஆண்டவர் மண்ணிலுள்ள எல்லா
அரசுகளையும் எனக்கு அடிமைப்படுத்தியுள்ளார்@ மேலும், யூதேயாவிலுள்ள யெருசலேமில்
தமக்கு ஒரு கோவிலைக் கட்டும்படி அவர் எனக்குக் கட்டளையிட்டுள்ளார்.
3 உங்கள் நடுவே அவருடைய மக்கள் யாரேனும் உண்டா? அவர்களோடு அவர்களின் கடவுள்
இருப்பாராக! அவர்கள் யூதாவிலுள்ள யெருசலேமுக்குப் போய் இஸ்ராயேலரின் கடவுளான
ஆண்டவருக்கு ஒரு கோவிலைக் கட்டுவார்களாக. யெருசலேமில் எழுந்தருளியிருக்கும் கடவுளே
உண்மைக் கடவுள்.
4 அக்குலத்தார் எங்கெங்கு வாழ்ந்துவரினும் அவர்கள் யெருசலேமிலுள்ள தங்கள் கடவுளுடைய
ஆலயத்திற்குக் காணிக்கைகளை ஒப்புக்கொடுப்பதோடு, பொன்னும் வெள்ளியும், ஏனைய
பொருட்களும், ஆடுமாடுகளும் அவர்களுக்குக் கொடுத்து உதவுவார்களாக" என்பதே அக்கட்டளை.
5 அப்போது யெருசலேமிலிருந்த ஆண்டவரின் ஆலயத்தைத்த திரும்பவும் கட்டி எழுப்புவதற்காக
யூதா, பென்யமீன் குலத்தலைவர்களும் குருக்களும் லேவியரும் கடவுளின் ஆவியால்
ஏவப்பட்டிருந்த அனைவரும் முன் வந்தனர்.
6 சுற்றிலுமுள்ள ஊர்களில் வாழ்ந்து வந்த அனைவரும் காணிக்கையாகக்
கொடுத்திருந்தவற்றைத் தவிர, பொன், வெள்ளிப் பாத்திரங்களையும் மற்றப் பொருட்களையும்
மிருகங்களையும் தட்டுமுட்டுகளையும் அவர்களுக்குக் கொடுத்து உதவினர்.
7 மேலும் நபுக்கோதனசார் யெருசலேமிலிருந்து எடுத்து வந்து தன் கடவுளின் கோவிலில்
வைத்திருந்த ஆண்டவரின் ஆலயப் பாத்திரங்களைச் சீருஸ் திருப்பிக் கொடுத்து விட்டான்.
8 அவற்றைப் பாரசீக அரசனான சீருஸ், கஸ்பாரின் மகன் மித்திரீ தாத்திசின் மூலம்
யூதாவின் தலைவனான சஸ்பசாரிடம் கொடுத்தான்.
9 அவையாவன: பொற்பாத்திரங்கள் முப்பது, வெள்ளிப் பாத்திரங்கள் ஆயிரம், கத்திகள்
இருபத்தொன்பது, பொற் கிண்ணங்கள் முப்பது@
10 வேறு வகை வெள்ளிக் கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்றப் பாத்திரங்கள் ஆயிரம்,
11 பொன் வெள்ளிப் பாத்திரங்கள் ஐயாயிரத்து நானூறு. இவற்றை எல்லாம் சஸ்பசாரும்,
பபிலோன் அடிமைத்தனத்திலிருந்து யெருசலேமுக்குத் திரும்பின யூதர்களும் கொண்டு
வந்திருந்தனர்.