அதிகாரம் 1
1 உலகெங்கும் சிதறுண்டு வாழும் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும், கடவுளுக்கும்,
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துக்கும் ஊழியனான யாகப்பன் வாழ்த்துக் கூறி எழுதுவது:
2 என் சகோதரரே, பலவகைச் சோதனைகளுக்கு நீங்கள் உள்ளாகும் போது, அவை எல்லாம்
மகிழ்ச்சி என்றே எண்ணுங்கள். உங்கள் விசுவாசம் சோதிக்கப்படுவதால், மனவுறுதி
விளையும் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.
3 அம் மனவுறுதியோ நிறைவான செயல்களில் விளங்குவதாக!
4 இவ்வாறு நீங்கள் குறைபாடு எதுவுமின்றி, சீர்மை குன்றாமல் நிறைவுள்ளவர்களாய்
இருப்பீர்கள்.
5 உங்களுள் எவனுக்காவது ஞானம் குறைவாயிருந்தால், அவன் கடவுளிடம் கேட்கட்டும்@
அவனுக்குக் கொடுக்கப்படும். முகம் கோணாமல் தாராளமாக எல்லாருக்கும் கொடுப்பவர் அவர்.
6 ஆனால் விசுவாசத்தோடு கேட்கவேண்டும். தயக்கம் எதுவும் கூடாது. தயக்கம் காட்டுபவன்
காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலைக்கு ஒப்பாவான்.
7 இத்தகையவன் ஆண்டவரிடம் ஏதாவது பெறக்கூடும் என நினைத்துக் கொள்ளலாகாது.
8 இவன் இரு மனம் உள்ளவன்@ நிலையற்ற போக்கு உடையவன்.
9 தாழ் நிலையிலுள்ள சகோதரன், தன் உயர்வை எண்ணிப் பெருமை கொள்வானாக.
10 செல்வம் உள்ளவனோ தாழ் நிலையுற்றாலும் பெருமை கொள்வானாக. ஏனெனில், அவன்
புல்வெளிப் பூக்களைப் போல் மறைந்து போவான்@
11 கதிரோன் எழ, வெயில் ஏறி, புல்லைத் தீய்த்து விடுகிறது. பூக்களோ உதிர்ந்து விட,
அழகிய காட்சி மறைந்து விடுகிறது. அவ்வாறே செல்வமுள்ளவனும் தான் மேற்கொள்ளும்
காரியங்களில் வாடிப்போவான்.
12 சோதனைகளை மனவுறுதியோடு தாங்குபவன் பேறுபெற்றவன். இதனால் அவனது தகைமை
எண்பிக்கப்படும்@ இறைவன் தம்மீது அன்பு செலுத்துவோர்க்கு வாக்களித்த வாழ்வை அவன்
வெற்றி வாகையாகப் பெறுவான்.
13 சோதனைக்குள்ளாகும் எவனும் ~இச்சோதனை கடவுளிடமிருந்தே வருகிறது~ எனச் சொல்லக்
கூடாது. ஏனெனில், கடவுள் தீமைபுரியச் சோதிக்கப்படுபவர் அல்லர்@ ஒருவரையும் அவர்
சோதிப்பதுமில்லை.
14 ஒருவன் சோதனைக்குட்படுவது, தன் சொந்த இச்சையாலே தான். அதுவே அவனைக் கவர்ந்து
தன்வயப்படுத்துகிறது.
15 இச்சையோ, கருவுற்றுப் பாவத்தைப் பெற்றெடுக்கிறது. பாவம் முழு வளர்ச்சியடைந்து
சாவை ஈன்றெடுக்கிறது.
16 என் அன்புச் சகோதரர்களே, ஏமாந்து போகவேண்டாம்.
17 நன்மையான எக்கொடையும், நிறைவான எவ்வரமும், விண்ணினின்றே வருகின்றன. ஒளியெல்லாம்
படைத்த தந்தையே அவற்றிற்குப் பிறப்பிடம். அவரிடம் எவ்வகை மாற்றமும் இல்லை@ மாறி
மாறி நிழல் விழச் செய்யும் ஒளியன்று அவர்.
18 தம் படைப்புக்களுள் நாம் முதற் கனிகளாகும் பொருட்டு, உண்மையை அறிவிக்கும்
வாக்கினால் நம்மை ஈன்றெடுத்தார். தாமே விரும்பியபடி இங்ஙனம் செய்தார்.
19 என் அன்புச் சகோதரர்களே, இவை உங்களுக்குத் தெரியும். இனி இறை வார்த்தையைக்
கேட்பதற்கு விரைதல் வேண்டும்@ பேசுவதற்கோ, தாமதித்தல் வேண்டும்@ சினங்கொள்வதற்கும்
தாமதித்தல் வேண்டும்.
20 ஏனெனில், சினங்கொள்வதால் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் விளைவதில்லை.
21 ஆகவே, பெருக்கெடுக்கும் தீமையையும் மாசு அனைத்தையும் அகற்றி, உங்கள் உள்ளத்திலே
ஊன்றப்பெற்ற வார்த்தையை அமைந்த மனத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள்@ இவ்வார்த்தையே உங்கள்
ஆன்மாவை மீட்க வல்லது.
22 இறை வார்த்தையின்படி நடப்பவர்களாய் இருங்கள். அதைக் கேட்பதோடு மட்டும் நின்று
விடாதீர்கள். அப்படிச் செய்வது உங்களையே ஏமாற்றிக் கொள்வதாகும்.
23 ஏனெனில் கேட்பதோடு மட்டும் நின்று அதன்படி நடவாதவன், தன் முகச்சாயலைக்
கண்ணாடியில் பார்த்து விட்டுப் போனதும்,
24 அச்சாயல் எப்படியிருந்ததென்பதை உடனே மறந்து விடும் ஒருவனுக்கு ஒப்பாவான்.
25 ஆனால் நிறைவான திருச்சட்டத்தை, விடுதலையாக்கும் அச்சட்டத்தைக் கூர்ந்து நோக்கி
அதிலே நிலைப்பவன் அதைக் கேட்பதோடு மட்டும் நின்று விடுவதில்லை@ கேட்பதை மறந்து
விடுவதுமில்லை@ அதன்படி நடக்கிறான். அதன்படி நடப்பதால் அவன் பேறு பெற்றவன்.
26 இறைவனின் தொண்டனாகத் தன்னைக் கருதும் ஒருவன் நாவடக்கமற்றவனாயிருப்பின், அவனது
தொண்டு வீணானதே. இத்தகையவன் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான்.
27 தந்தையாகிய கடவுள் முன்னிலையில் புனிதமும் மாசற்றதுமான தொண்டு எதுவெனில்,
வேதனையுறும் அனாதைகள், கைம்பெண்கள் இவர்களை ஆதரிப்பதும், உலகத்தால் மாசுபடாமல்
தன்னைக் காத்துக் கொள்வதுமே.