No results found

    அலுவலகத்தில் மேலதிகாரி எதிரியல்ல

    மேலதிகாரிகள் என்றாலே ‘நம்மிடம் கடுமையாக வேலை வாங்குபவர்கள், எப்போதும் கடுகடுவென்று இருப்பவர்கள்’ என்பதுதான் பெரும்பாலான அலுவலக பணியாளர்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது. அப்படி அவர் கண்டிப்புடன் நடந்து கொள்வதற்கு யார் காரணம்? எதற்காக அப்படி நடந்து கொள்கிறார்? என்று பலரும் யோசித்து பார்ப்பதில்லை. அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் ஏராளம்.

    ஆனால் அதைப்பற்றி அவர்கள் சட்டென்று வெளியில் சொல்லமாட்டார்கள். தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களை கண்காணிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருப்பதுபோல, அவர்களும் கண்காணிப்பு வட்டத்திற்குள்தான் இருப்பார்கள். தங்களுக்கு அடுத்த மட்டத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு பதில் சொல்லும் பொறுப்பு அவர் களுக்கு இருக்கிறது. ஒரு ஊழியர் தவறு செய்தால் கூட அது மேலதிகாரிக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். அவர்தான் அந்த தவறுக்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டிய நிலை ஏற்படும். அதேவேளையில் தவறு செய்த ஊழியர் மீது கடுமை காட்டவும் முடியாது. ஏனெனில் மேலதிகாரி என்பவர் தனக்கு கீழே பணிபுரியும் அனைவரையும் அனுசரித்து போக வேண்டிய கட்டாயத்தில் இருப்பார். ஒவ்வொரு சின்ன சின்ன தவறுகளையும் திருத்தி அலுவலகத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு. ஊழியர்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். அதற்கு தீர்வு காணும் பொறுப்பை சுமக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு அலுவலகத்திலும் மேலதிகாரிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும்.

    திருட்டு: அலுவலகத்தில் வாங்கும் ஸ்டேஷனரி பொருட்கள் காணாமல் போவது பொதுவாக எல்லா அலுவலகங்களிலும் நடக்கும் விஷயம். அதற்கு யாராவது ஒருசிலர் தான் காரணமாக இருப்பார்கள். அவர் களின் சுபாவம் வெளியே தெரியும்போது மதிப்பையும், மரியாதையையும் இழக்க நேரிடும். ரக்‌ஷன், ‘கஸ்டமர் கேர்’ பிரிவில் பணியாற்றும் ஊழியர். வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்காக அவர் வசம் ஒப்படைக்கப்படும் பரிசு பொருட்களில் சிலவற்றை யாருக்கும் தெரியாமல் தன் வீட்டிற்கு எடுத்து சென்றுவிடுவார். இந்த விஷயம் நீண்ட நாட்களுக்கு பிறகுதான் அலுவலக நிர்வாகத்திற்கு தெரியவந்தது. இந்த விவகாரத்தில் ரக்‌ஷன் மட்டுமின்றி மேலதிகாரியும் நெருக்கடிக்கு உள்ளானார். நிர்வாகத்திற்கு பதில் சொல்லும் கடமை மேலதிகாரிக்கு இருப்பதால் ரக்‌ஷன் மீது கோபம் கொண்டார். ரக்‌ஷன் துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளானார். சக ஊழியர்களிடம் மதிப்பை இழந்தார்.

    முக்கியத்துவம்: அலுவலகத்தில் தனக்கு தரப்பட்டிருக்கும் வேலையின் முக்கியத்துவத்தை புரிந்து நடந்து கொள்ளும் பொறுப்பு ஊழியர் களுக்கு இருக்கிறது. ரமேஷ் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்துவிடுவார். அதேபோல பணி நேரம் முடிந்ததும் சில நிமிடங்கள் கூட தாமதிக்காமல் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுவிடுவார். இந்த இடைப்பட்ட நேரத்தில் தனக்கான வேலையை பற்றி சிந்திக்க மாட்டார். வேலை மீது ஆர்வம் இல்லாதவராக இருப்பார். எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் பணி நேரம் முடிந்துவிட்டால் அந்த வேலையை பாதியில் அப்படியே விட்டுவிட்டு புறப்பட்டுவிடுவார். அலுவலகத்திற்கு வருவதும், போவதும் மட்டும்தான் அவரை பொறுத்தவரை முக்கியமான பணி. வேலை இரண்டாம் பட்சம்தான். ஒருசில வேலைகளை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடித்தாக வேண்டியிருக்கும். அதற்கு மேலதிகாரி தான் பொறுப்பேற்க வேண்டும். அதை புரிந்து கொண்டு ஊழியர்கள் பணிபுரிய வேண்டும். நேரத்தில் கவனம் கொள்வது போலவே வேலையிலும் கவனம் தேவை. வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிட்டு கூட மேலதிகாரியிடம் பெர்மிஷனோ, விடுமுறையோ எடுத்துக் கொள்ளலாம்.

    பேச்சு: ஊழியர்கள் வேலை நேரத்தில் பேசுவது, அரட்டை அடிப்பது என நேரத்தை வீணடிப்பது மேலதிகாரிக்கு பிடிக்காத விஷயம். இந்த பழக்கத்தை தொடரும்போது அது மற்ற ஊழியர்களின் வேலையையும் பாதிக்கும். வேலை செய்து கொண்டிருப்பவர்களின் கவனம் பேசிக்கொண்டிருப்பவர்கள் மீது பதியும். அதனால் வேலையில் தவறு எழக்கூடும். அலுவலகத்தின் அமைதியான சூழலும் பாதிப்புக்குள்ளாகும். ஆதலால் அலுவலகத்தின் அமைதியை பாதிக்கும் எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது. மேலதிகாரியை டென்ஷனாக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று. அலுவலகத்தில் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டுவிட்டு, மேலதிகாரி தன் மீது கோபப்படக்கூடாது என்று எதிர்பார்ப்பது தவறானது.

    அலுவலக ரகசியம்: அலுவலக ரகசியங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்வது ஆபத்தான விஷயம். குறிப்பாக வங்கி ஊழியர்கள் அலுவலக ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். மிகப்பெரிய குற்றங்கள் நடப்பதற்கு இதுபோன்ற அஜாக்கிரதையான பேச்சுகள் காரணமாக அமைந்திருக்கின்றன. இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டியது மேலதிகாரிதான். இத்தகைய செயலில் ஈடுபடும் ஊழியர்களிடம் தவறை புரிய வைத்து அவர்களை வழிநடத்துவது மேலதிகாரியின் கடமை.

    கவனம்: மேலதிகாரிகளின் பேச்சை கவனமாக கேட்க வேண்டும். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை மனதில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு தரும் முதல் மரியாதை. முக்கியமான மீட்டிங்கில் மேலதிகாரி அலுவலக தகவல்களை விளக்கிக்கொண்டிருப்பார். அந்த நேரத்தில் ஒரு ஊழியர் செல்போனில் ஆழ்ந்திருந்தால் அது நிச்சயம் மேலதிகாரிக்கு எரிச்சலை ஏற்படுத்தும். தம்மிடம் ஒப்படைக்கப்படும் முக்கியமான வேலையை எப்படி முடிக்க வேண்டும் என்பதை மேலதிகாரியின் பேச்சை கேட்டால்தான் புரியும். அந்த நேரத்தில் விளையாட்டுத்தனமாக இருந்துவிட்டு வேலையை தவறாக செய்யக்கூடாது. மேலதிகாரியின் பேச்சை கவனமாக கேட்பது ஊழியர்களின் முக்கிய கடமைகளுள் ஒன்றாகும். வேலையில் இருக்கும் குறை நிறைகளை விளக்கி சொல்லிக்கொண்டிருப்பார். அதை ஊழியர்கள் கவனமாக கேட்கும்போதுதான் சரிவர செயல்பட முடியும். தவறுகள் தவிர்க்கப்படும். தேவையற்ற மன அழுத்தம், டென்ஷன் எட்டிப்பார்க்காது.

    வேலையில் ஈடுபாடு: திறமைசாலிகளாக இருந்தால் கூட ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும்போது கவனச்சிதறல் ஏற்படும். அலுவலக நேரத்தில் சொந்த வேலைகளை செய்வது, நண்பர்களுடன் செல்போனில் உரையாடுவது இவையெல்லாம் கவனச்சிதறலை ஏற்படுத்தும். நண்பருக்கு அனுப்ப வேண்டிய குறுஞ்செய்தியை சுரேஷ் தவறு தலாக மேலதிகாரிக்கு அனுப்பிவிட்டார். அதை பார்த்ததும் மேலதிகாரி கொந்தளித்துவிட்டார். முக்கியமான வேலையை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது சுரேஷின் செயல் மேலதிகாரியை கோபத்தில் ஆழ்த்தியது. சுரேஷை 7 நாட்கள் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். ஆதலால் அலுவலக நேரத்தில் அலுவலக பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். மற்ற பணிகளை செய்து மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது.

    வேலையை சரிவர செய்து முடிக்க முடியாமல் போகும்போது ஏதாவதொரு காரணம் சொல்லி தப்பிக்கவும் முயற்சிக்கக்கூடாது. குறிப்பாக உடல்நலக்குறைவை எப்போதும் காரணம் காட்டிக்கொண்டிருக்க முடியாது. இறுதியில் இவர் வேலை செய்ய தகுதியற்றவர் என்று தீர்மானித்து விடுவார்கள். சக ஊழியர்களை பற்றி எப்போதும் குறை சொல்லிக்கொண்டிருக்கவும் கூடாது. இது மேலதிகாரிக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

    பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று யோசிக்க வேண்டும். மேலதிகாரி எப்போதும் சமரசம் செய்து கொண்டிருக்கமாட்டார். ஏதாவதொரு காரணம் சொல்லிக்கொண்டு மேலதிகாரியின் அறைக்குள் அடிக்கடி செல்வது, ஏகப்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பது, ஆலோசனை செய்வது, அதற்கு அதிக நேரம் எடுத்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. ஊரடங்கு காலத்தில் அலுவலக பணிகளை வீட்டில் இருந்தபடியே செய்யும் சூழலில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

    Previous Next

    نموذج الاتصال