சங்கீதம் 1
1 தீயோரின் அறிவுரைப்படி நடவாதவன், பாவிகளின் வழியில் செல்லாதவன், பழிகாரர்
கூட்டத்தில் அமராதவன் பேறு பெற்றோன்.
2 கடவுளுடைய திருச்சட்டத்தில் இன்பம் காண்பவனாய், அதை அல்லும் பகலும் தியானிப்பவனே
பேறு பெற்றோன்.
3 வாய்க்கால்களின் ஓரத்தில் நடப்பட்டு, இலைகள் என்றும் உதிர்க்காமல் தக்க
பருவத்தில் கனி தரும் மரத்துக்கு அவன் ஒப்பாவான்: அவன் செய்வதனைத்திலும் வெற்றி
பெறுவான்.
4 தீயவருக்கு அங்ஙனமிராது, ஒரு நாளுமிராது: காற்றோடு காற்றாய்ப் பறக்கும் பதர்
போன்றவர்கள் அவர்கள்.
5 நீதித்தீர்ப்பு வரும் போது தீயோர் நிலை குலைந்துபோவர்: நல்லவர்கள் சபையில்
பாவிகள் நிலைத்திரார்.
6 நல்லோரின் வழியைக் கடவுள் பாதுகாப்பார்: தீயோரின் வழியோ அழிவுக்கே செல்லும்.