No results found

    மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்

    வாழ்க்கை என்பது இன்பம், துன்பம் இரண்டும் கலந்தது. தங்கள் வாழ்க்கை எவ்வித சச்சரவுகளுமின்றி நல்லபடியாக அமைந்திருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தங்களிடம் இருப்பதை கொண்டு திருப்தி அடைந்துவிடும் சுபாவம் கொண்டவர்கள் ரொம்பவே குறைவு. மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டு பார்க்கும் மனோபாவம்தான் பலரிடமும் இருக்கிறது.

    தன்னால் அவரை போல் வாழ முடியவில்லையே? என்ற ஏக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்கள். அதன் காரணமாக மன அமைதியை இழந்து தவிப்பார்கள். பிறருடன் ஒப்பிட்டுப்பார்க்கும் பழக்கத்தை அடிக்கடி பின்பற்றுவது நாளடைவில் நோயாகவே மாறிவிடும். நிம்மதியின்மை, பாதுகாப்பின்மையை உணரக்கூடும்.

    பிரபல அமெரிக்க எழுத்தாளர், பாடலாசிரியர் ஸ்டீவன் பர்டிக், ‘‘ஒவ்வொருவரும் தங்களுக்குள் முகத்திரை இட்டுக்கொள்கிறார்கள். அந்த திரைக்குள் இருந்து மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டு பார்க்கிறார்கள். அதுவே நாம் வாழ்க்கையில் போராடிக்கொண்டிருப்பதற்கு காரணமாக இருக்கிறது’’ என்றார்.

    மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவது சிறந்ததல்ல என்பதை புரிந்துகொள்ள உதவும் வீடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகிறது. அந்த அனிமேஷன் வீடியோவில், மற்ற பறவைகள் தன்னை விட சிறந்தவை என்று நினைக்கும் காகம், அவற்றுடன் பேசி படிப்படியாக உண்மை நிலையை கண்டறிகிறது. அந்த காணொளியின் தொடக்க காட்சியாக காகம் ஒன்று ஏரிக்கரையின் ஓரத்தில் இருக்கும் மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கிறது. அப்போது ஏரியில் நீந்திக்கொண்டிருக்கும் அன்னப்பறவையை காகம் அழைக்கிறது. உடனே காகத்தை நாடி அன்னப்பறவை நீந்தி வருகிறது. அதனிடம் காகம், ‘‘உலகில் நீதான் மிகவும் மகிழ்ச்சியான பறவையா?’’ என்று கேட்கிறது.

    அதற்கு அதற்கு அன்னப்பறவை, ‘‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா? நீங்கள் கிளிகளை பார்த்ததில்லையா. ஒன்றல்ல.. இரண்டு கிளிகளை பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும்’’ என்கிறது. ஏரிக்கரையில் உள்ள மற்றொரு மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கும் கிளியோ அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. தன்னை விட மயில்தான் அதிக வண்ணம் கொண்டிருக்கிறது.

    பார்க்க அழகாகவும் இருக்கிறது என்று சொல்கிறது. இதையடுத்து மூன்று பறவைகளின் கவனமும் மயிலை நோக்கி திரும்புகிறது. ஆனால் மயிலோ கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ‘‘தான் அழகாக இருப்பதால்தான் கூண்டில் அடைக்கப்பட்டு வியாபாரத்திற்காக விற்கப்படுவதாக’’ வேதனை கொள்கிறது. அத்துடன் ‘‘யாருடைய பேச்சையும் கேட்காமல் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக பறந்து செல்லக்கூடிய காகமாக நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’’ என்கிறது.

    மற்றவர்கள் நம்மை விட சிறந்தவர்கள், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஆனால் அவர்கள் படும் கஷ்டங்கள் நமக்கு தெரியாது என்பதை இந்த வீடியோ விளக்கும் விதமாக அமைந்திருக்கிறது. யாரும், யாருடனும் ஒப்பிட்டு பார்க்காமல் இருந்தாலே மகிழ்ச்சியாக வாழலாம் என்றும் சுட்டிக்காட்டுகிறது.

    மற்றவர்கள் நம்மை விட சிறந்தவர்கள், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஆனால் அவர்கள் படும் கஷ்டங்கள் நமக்கு தெரியாது என்பதை இந்த வீடியோ விளக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

    Previous Next

    نموذج الاتصال