No results found

    வந்தவாசியில் 40 ஆண்டுகளாக மழைநீரை மட்டுமே குடித்து வரும் தம்பதி

    வந்தவாசி அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதையான்(76). இவரது மனைவி ராணியம்மாள்(72). இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அதே கிராமத்தில் உள்ள தங்களது விவசாய நிலத்தில் கோதையான்-ராணியம்மாள் தம்பதியினர் வீடு கட்டி குடும்பத்துடன் அங்கு வசிக்க சென்றனர். அப்போதிலிருந்தே இவர்கள் குடிக்கவும், சமையல் செய்யவும் மழைநீரையே பயன்படுத்தி வருகின்றனராம். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- நாங்கள் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்தே கிணற்று நீரையோ, ஆழ்துளைக் குழாய் நீரையோ உபயோகித்ததே இல்லை. மழைநீரை மட்டுமே சேமித்து உபயோகிக்க தொடங்கினோம். மழை பெய்யும் போதெல்லாம் பேரல்கள், அண்டாக்கள், சிறுசிறு பாத்திரங்கள் என அனைத்திலும் மழைநீரை சேமித்து வைத்துக் கொள்வோம்.

    மழை பெய்யத் தொடங்கியதும் வீட்டுக் கூரை மேல் உள்ள அழுக்கு அனைத்தும் சில நிமிடங்களில் போய்விடும். இதன் பின்னர் கூரையிலிருந்து வழியும் சுத்தமான நீரை பிடித்து சேமித்து வைத்துக் கொள்வோம். பின்னர் அந்த நீரை வடிகட்டி காய்ச்சி பயன்படுத்துவோம். மழைநீரை எவ்வளவு நாள் சேமித்து வைத்தாலும் அதில் புழு, பூச்சிகள் அண்டாது. மழைநீரை மட்டுமே உபயோகிப்பதால் உடல்நல பாதிப்பு எதுவும் இல்லாமல், மருத்துவர்களை அணுகாமல் வாழ்ந்து வருகிறோம். எங்களை பார்த்து அருகிலுள்ள வீட்டினர் மழைநீரை சேமித்து உபயோகப்படுத்த தொடங்கியுள்ளனர். இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றனர். மழைநீரை உயிர்நீர் என்பர். இறைவனின் அற்புத படைப்புக்களில் ஒன்றான மழைநீரை சேமித்து பயன்படுத்தும் இந்த தம்பதி தங்கள் கிராமத்துக்கே பெருமை சேர்த்துள்ளனர் என்று அந்த கிராமத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    Previous Next

    نموذج الاتصال